
நெஞ்சம் சுமந்த வலி!
பச்சைத் துரோகத்திற்கு
இன்னுமொரு பெயர்
பாரத தேசம்.
முதுகிற் குத்திய
வலியின் ரணம்
ஒவ்வொரு மாதமும்
ஏதோவொரு வழியில்
குத்திக் கிழிக்கும்!
இம் மாதம்
திலீப மாதம்!!
உலகம் முழுவதையும்
பட்டினி சூழ்கிறதாம்
பத்திரிகைகளில்
பத்தி பத்தியாகச் செய்திகள்.
உள்நாட்டுப் போர்…
நாடுகளுக்கிடையில்
நாட்டாமைப் போர்…
பூமிப்பந்தை வளைத்துப் போட்ட
பெருந்தொற்று…
கார்ப்பரேட்காரரின் கைங்காரியத்தால்
காணாமற் போன விளை நிலங்கள்..,
நடுத் தெருவில்
நிறுத்தப்பட்ட விவசாயிகள்..
பஞ்சத்திற்கும் பஞ்சாயத்திற்கும்
ஆயிரம் காரணங்கள்!!
தாய்மண்ணைப் பூசித்த
ஒரேயொரு காரணத்தால்,
இலட்சோப இலட்சம் பேர்
நலமாய் வாழ்வதற்காய்,
புசிக்க மறுத்தவன்…
நீரையும் துறந்தவன்..
ஒரு புனிதன் – அவன்
வரலாறு எழுதிய
புரட்டாதி மாதம் – அது
காலம் கடந்தும்
நினைவில் நிலைக்கும்!!
இங்கு..
காலி வயிற்றுடன்…
எரிபொருளுக்காக எழுந்த
ஒரு போராட்டம்..
களனியில் பிணங்களும்
கைதுகளும்
காணாமற் போதல்களுமாக
முடிவைத் தொட்டது.
பொருளை நேசித்துப்
போராடியவர்கள்
நாட்டை நேசித்திருந்தால்…?
நிலைமையே வேறு…
இப்போ
சோத்துச் சண்டை
சோகமாய் முடிய
யார் யாரெல்லாமோ வந்து
நாட்டாமை காட்டுறார்..
தார்மீக உரிமைகள்
தொடர்ந்தும் மறுக்கப்படும்
எங்கள் தாய்மடி..
விளை நிலங்கள் கூட
இங்கு
விகாரைக்குச் சொந்தம்
என்றால்..
நீதி தேவனின்
வார்த்தைக்கு
மதிப்புத்தான் என்ன?
தாய்நில வேள்வி
தரிசாக்கப்பட்டதை
சாக்காக வைத்து
அந்நிய பூமியாகுது
எம் நிலம்!
அயல் நாடுகளில் தவிக்குது
எங்கள் இனம்!!
பாவிகள் காலடி
படாமல் காக்க
எத்தனை விருட்சங்கள்
தம்மைத் தந்தன?
வீட்டுக்கு ஒருவரை
விதைத்த பின்னும்
வாளாவிருத்தல் தகுமா?
எங்களை விடுவிக்க
யார்யாரோ வருவார்…
நாடுகள் கூடி
நல்லது செய்யும்…
எங்களுக்காக யாரோ உழுவார்…
விதைப்பார்…
கதிர் அறுப்பார் என்று
இன்னமுமா
காத்துக் கிடக்கிறோம்?
பகற் கனவிடை கழிந்த
காலங்கள் போதும்!!
நல்லூரில் தனைக் கொடுத்தவன்
சாட்சியாக
நல்லதொரு சமுதாயம்
தனைப் படைக்க வேண்டாமா?
எழுவீர்…!! எழுவீர்….!!
பொழில்

