ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 30 வருடங்களின் பின் 6 பேரும் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன் உட்பட 30 வருடங்களின் பின் 6 பேரும் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நளினி உள்ளிட்ட 6 பேர் சிறையில் உள்ளனர். உச்ச நீதிமன்றம் கடந்த மே 18-ம் திகதி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.

இதையடுத்து, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன் , ரவிச்சந்திரன் ஆகியோா் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆறு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும், இந்த வழக்கில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று கூறி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், பேரறிவாளனின் நன்னடத்தை குறித்து, பரோலில் வெளிவந்தபோதும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டதாக மேற்கோள் காட்டியுள்ளது. தாங்களும் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும்,இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்கால பிணை வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம், இது போன்று ஏற்கெனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பதாலும், பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்தது போன்ற அதிகாரம் உயா்நீதிமன்றத்திற்கு இல்லை என்றும் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 17-ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து, ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகியோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு கடந்த செப்டம்பா் 26-ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் இறுதி விசாரணை மேற்கொள்ளும் வகையில் எதிா்மனுதாரா்களான தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறியிருந்தனா்.

இதைத்தொடா்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த இரு தனித்தனி பிரமாணப் பத்திரத்தில், ‘ ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி ஸ்ரீஹரன், ஆா்.பி.ரவிச்சந்திரன் ஆகியோரின் ஆயுள் தண்டனையை குறைக்கும் வகையில், 2018-இல் நிறைவேற்றப்பட்ட தமிழக அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநா் கட்டுப்பட்டவா் ஆவாா்.

அந்தப் பரிந்துரை இறுதியாக ஜனவரி 27, 2021-இல்தான் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. அதன் மீது கடந்த ஓரு ஆண்டு மற்றும் ஒன்பது மாதங்களாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜீவ் கொலை வழக்கில் தொடா்புடைய ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், சாந்தன் ஆகியோரும் நளினி, ரவிச்சந்திரன் மேல்முறையீட்டு மனுவுடன் தங்களை இடையீட்டு மனுதாரா்களாக சோ்க்கக் கோரியும், பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி தங்களையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், சிறையில் இருந்துவரும், 6 பேரின் நன்னடத்தை குறித்து தமிழக அரசும், மனுதாரர்கள் தரப்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )