
பஸிலுக்கு எவரும் தடை போட முடியாது
பஸில் ராஜபக்ஷவினால் இலங்கையில் அரசியலில் ஈடுபடுவதற்கு எந்த தடைகளும் கிடையாது என்றும், இதன்படி அவர் தொடர்ந்தும் அந்த நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியானர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பஸில் ராஜபக்ஷ இலங்கையில் அரசியல் செய்வதற்கு எவருக்கும் தடைகளை விதிக்க முடியாது. அவர் இப்போது இலங்கையில் இல்லாவிட்டாலும் அரசியலில் ஈடுபடுகின்றார். அவருக்கு தேவையான நேரத்தில் இலங்கையில் அரசியலில் ஈடுபடுவார். அவருக்கு அந்த நடவடிக்கைகளுக்கு குடியுரிமை விடயம் எந்த பிரச்சினையும் கிடையாது. அவர் குடியுரிமை பிரச்சினை ஏற்படுவதற்கு முன்னரே பாராளுமன்றத்தில் இருந்து விலகிவிட்டார்.
இந்த நாட்டில் கட்சியொன்றை அமைத்து, அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை, அந்த கட்சி ஊடாக ஜனாதிபதியொருவரை உருவாக்கியமை, உள்ளூராட்சி சபைகளில் வெற்றியடைந்தமை எல்லாம் அவருக்கு இரட்டைக் குடியுரிமை தொடர்பான தடைகள் இருக்கும் போதே ஆகும். இதனால் அவருக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு எந்த தடைகளும் கிடையாது. அவர் அதனை பலமாக செய்வார். தொடர்ச்சியாக அவர் அந்த பலத்தை வழங்குவார்.

