
அரசியல் கைதிகளின் உறவுகள் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு; விக்னேஸ்வரன் எம்.பியும் இணைந்தார்
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து தங்கள் உறவுகள் விடுதலைக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்தச் சந்திப்பின்போது நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் வடமாகாண ஆளுநருக்கு விளக்கமளித்தார்.
சுமார் 10 தொடக்கம் 26 ஆண்டுகள் சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் 46 பேர் உள்ள நிலையில் அவர்களை விரைவாக விடுவிப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேருக்கு வழக்கு நடைபெறுகின்ற நிலையில் 24 பேர் தண்டனை வழங்கப்படும் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களும் உள்ளனர்.
இதில் தீர்ப்புகளுக்காக தவணை இடப்பட்டவர்களும் உள்ள நிலையில் தீர்ப்பு வழங்காது வழக்கை ஒத்தி வைக்கும் செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது என கோமகன் சுட்டிக்காட்டினார்.
பெரும்பாலான வழக்குகளில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் அவர்களை புனர்வாழ்வு ஊடாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
குறித்த சந்திப்பில் மெய்நிகர் வழியாக இணைந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், அரசியல் கைதிகள் விவகாரத்தில் வட மாகாண ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பக்கபலமாக செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரேரிக்கப்பட்டதான அசோகா டீசில்வா ஆணைகுழு அறிக்கையை பார்த்தேன் . குறித்த அறிக்கை தமிழ் அரசியல் கைதிகளின் முற்று முழுதாக விடுவிக்கப்பட வேண்டும் என கூறப்படவில்லை.
ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளேன்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மேலாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் போது அது சிறப்பாக இருக்கும் எனவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு அவர்களின் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதியை கோருமாறு ஆளுநரிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த ஆளுநர், குறித்த விடயம் தொடர்பில் விரைவாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கடிதத்தை அனுப்புவதாகவும் அதன் பிரதியை விக்னேஸ்வரன் எம்.பிக்கு அனுப்புவதாகவும் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் அரசியல் கைதிகளின் விடயத்தில் கரிசனை கொண்டு செயல்படுகின்ற நிலையில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு அவர் உதவ வேண்டும் என அரசியல் கைதிகளின் உறவுகள் கோரிக்கை விடுத்தனர்.

