இலங்கையிலிருந்து மக்கள் தப்பியோடுவதில் ஆர்வம்

இலங்கையிலிருந்து மக்கள் தப்பியோடுவதில் ஆர்வம்

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையான 9 மாதங்களுக்குள் 7 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாத இறுதி வரை மொத்தம் 700,733 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பியுமி பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2021 ஆம் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்ட மொத்த கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 392,032 என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இவ்வாண்டு முதல் 9 மாதங்களில் மட்டும் கடவுச்சீட்டு பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.

தரவுகளின்படி இவ்வாண்டு 9 மாதங்களில் 409,919 ஆண்களுக்கும் 290,814 பெண்களுக்கும் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இந்த மாதத்தில் மட்டும் 115,286 கடவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பற்றாக்குறை, நிலையற்ற தன்மை உள்ளிட்ட காரணிகளால் நாட்டில் இருந்து புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )