
குருந்தூர் மலை விகாரையை காப்பாற்ற உடன் தலையிடுங்கள்; கொழும்பில் சரத் வீரசேகர தலைமையில் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைக்கப்படும் விகாரையை அபாயகரமான நிலையில் இருந்து காப்பாற்ற அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரி விகாரையின் தலைவர் கல்கமுவ சாந்தபோதி தேரர் உள்ளிட்ட சிலர் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘குருந்தி இலங்கையின் பாரம்பரியம், அதை காப்பாற்றுவோம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிக்குமார்கள் குழு, பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர மற்றும் ஜயந்த சமரவீர மற்றும் அருண் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுதந்திர சதுக்கத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது கொழும்பு 7 இல் உள்ள பௌத்த அலுவல்கள் திணைக்களத்துக்கு சென்றதுடன் ஆர்ப்பாட்டக் குழுவினால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சிலரே பங்கேற்றிருந்தனர்.
முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும் தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொழும்பில் மேற்படி ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் அருண் சித்தார்த்தன் ஆகியோருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் சற்று அமைதியின்மை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் உரிய சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வர்த்தமானி அறிவித்தலை மேற்கொண்டிருப்பார்களானால் இன்று நாம் இந்த இடத்தில் இருந்திருக்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. அதை அவர்கள் மேற்கொள்ளவில்லை. எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிட்டு இன்று ஒன்றும் முடியாத சந்தர்ப்பத்தில் சிங்கள மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக இலங்கை தேசிய கொடியினை ஏந்திய ஒருவரால் சரத் வீரசேகரவுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.
இங்கு சரத் வீரசேகர மற்றும் அருண் சித்தார்த்தன் ஆகியோர் உரையாற்றினார்.

