திலீபனின் தியாகத்தை போற்றி வட-கிழக்கு, நல்லூரில் பிரதான நிகழ்வு; புலம்பெயர் தேசங்களிலும் எழுச்சி

திலீபனின் தியாகத்தை போற்றி வட-கிழக்கு, நல்லூரில் பிரதான நிகழ்வு; புலம்பெயர் தேசங்களிலும் எழுச்சி

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் பிரதான வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

தியாகி தீலிபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த நேரமான காலை 10.48 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகி, பொதுச் சுடர் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பல பாகங்களில் இருந்தும் ஊர்திகள் பவனி காலை 10 மணி முதல் நல்லூர் தியாக தீபம் திலீபனுடைய நினைவாலயத்தை வந்தடைந்த வண்ணம் இருந்தன.

அதேவேளை கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்குக்காவடி எடுத்து தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

நல்லூரில் அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்தவர்கள் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை அரசியலாக்கி குழப்ப முற்பட்டபோதும், தியாகி திலீபனை உண்மையாக நேசித்த மக்கள், முன்னாள் போராளிகள், மாணவர்கள் அமைதியாக திலீபனின் தியாகத்தைப் போன்றி மரியாதை செய்தனர்.

யாழ்ப்பாணத்தில் பிரதான நினைவேந்தல் இடம்பெற்ற அதேவேளை, வடக்கு – கிழக்கில் அனைத்து மாவட்டங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவில் கடந்த வருடங்களில் அடங்குமுறைகளால் நினைவேந்தல் நிகழ்வுகளை சிறப்பாக முன்னெடுக்க தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதும் இவ்வாண்டு பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. நேற்று காலை 8.30 மணியளவில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்த சங்கத்தின் ஏற்பாட்டில் திலீபனின் நினைவு நிகழ்வு நடைபெற்றது

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிலையங்களும் பூட்டப்பட்டு வணிகர்கள் பொதுமக்கள் என பலர் ஒன்றுகூடி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு பகுதியிலும் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆ.ஜோன்சன் தலைமையில் அஞ்சலி நிகழ்லு நடைபெற்றது.

இதில் சமூக செயற்பாட்டாளர்கள், வணிகர்கள், பொதுச்சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு திலீபன் தியாகத்தைப் போற்றினர்.

இதேவேளை காலை பத்து மணிக்கு முல்லைத்தீவு நகர் பகுதியில் பொதுச் சந்தை வளாகத்திற்கு முன்பாக தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளின் பின்னர் தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு உணர்பூர்வமாக நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )