வட, கிழக்கு ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும்

வட, கிழக்கு ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்த வேண்டும்

வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் நில ஆக்கிரமிப்புகள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தப் போவதில்லை என்றும், இதனால் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற, அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது சித்தார்த்தன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கபதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது வரிகள் மற்றும் அவற்றை உயர்த்துவதாகவே இருக்கும். அதன்போது சாதாரண ஏழை மக்கள் பாதிக்காதவாறு இருக்க வேண்டும். இன்று சிலநேரங்களில் சில குடும்பங்கள் ஒருவேளை, இரண்டு வேளை மாத்திரம் சாப்பிடும் நிலைமையே உள்ளது. இந்த நிலைமை அதிகரித்துவிடக்கூடாது.

அத்துடன் இலஞ்ச ஊழல்களை தடுப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனைகளை வழங்க வேண்டும். ஏற்கனவே வங்குரோத்து நாடாக கூறப்படும் நிலைமையில் இவ்வாறு ஊழல்கள் இருந்தால் நிலைமை மோசமாக அமையும்.

இதேவேளை பாதுகாப்பு நிதி யுத்தத்திற்கு பின்னரும் அதே அளவிலேயே ஒதுக்கப்படுகின்றது. இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இந்துக் கோயில்களை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதுடன், அங்கு பௌத்த கோயில்களை கட்டுவதிலும் ஈடுபடுகின்றது.

இவ்வாறாக பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைக்கப்படும் கோயில்களில் ஒன்றான கோணேஸ்வரத்தில் சுற்றுலாத்தளத்தை உருவாக்கி மிகப்பெரிய பௌத்த கோயில் அமைக்கப்படவுள்ளது. இப்படி பல்வேறு விடயங்களை செய்து கோணேஸ்வரத்தின் புனிதத் தன்மையை இல்லாது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த ஆலயத்திற்கான 18 ஏக்கர் நிரப்பரப்பை அபகரிக்கும் நிலைமையும் உருவாகியுள்ளது. இதனை உடனடியாக நிறுத்தி, கோணேஸ்வரத்தை புனிதத் தலமாக பிரகடனப்படுத்த வேண்டும்.

அதேபோன்று குருந்தூர் மலையிலும் ஆக்கிரமிப்புகள் நடக்கின்றன. நீதிமன்ற உத்தரவையும் மீறி கட்டிட நிர்மாணங்கள் நடக்கின்றன.

இவைகள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை கொண்டுவரப் போவதில்லை.

ஜனாதிபதி புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றார். புலம்பெயர் அமைப்புகள் சிலவற்றின் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் பல அமைப்புகளுக்கு இன்னும் தடைகள் இப்போதும் உள்ளன. கொள்கை ரீதியான விடயமாக இதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றே அவர்கள் அங்கே பாடுபடுகின்றனர்.

அதேபோன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் பேசிய இந்திய பிரதிநிதி, அரசியல் தீர்வு இன்றி இன இணக்கப்பாடு கிடையாது. இன இணக்கப்பாடு இல்லாவிட்டால் பொருளாதார வளர்ச்சி இருக்காது என்று கூறியுள்ளார். இதனை பெரும்பான்மையினர் புரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதன் மூலம் அனைத்து இனத்தவர்களும் இணைந்து நாட்டை பொருளாதார ரீதியில் சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்ல முடியும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )