மாறுமா நிலை?

மாறுமா நிலை?

கோத்தா மறுபடியும்

கொழும்புக்கு வருகிறாராம்..!

கொண்டாட ஒரு கூட்டம்…

கொடி பிடிக்க ஒரு கூட்டம்…

திண்டாட்டம் மட்டும்

தீரவில்லை எம் வாழ்வில்!!

வந்தவரை வரவேற்பர்…..!

வசிப்பதற்கு என்று ஒரு

அரண்மனைகூட

அரச செலவிலே கட்டப்படலாம்..!!

குற்றப் பத்திரிகை

தாக்கல் வருமா?

சிலருக்கு சந்தேகம்.

குற்றமா…? கோத்தாவா…?

கிலோ என்ன விலை?

காப்பர் ரணில் இருக்க

கோத்தாவுக்கென்ன பயம்?

குடிசைகூட இல்லாமல்

நாதியற்று

நடுத்தெருவில் நிற்கும்

நாம் இங்கே…

கோபுரத்தில் குடியிருக்கும்

அவர்களெங்கே..?

நாட்டு நடப்பிலேனும்

நல்லது நடந்திருக்கா…?

விலைகள் கொஞ்சமாய்

இறங்கித்தான் இருக்கிறது..

பயனென்ன?

பணத்தை ஈட்டுகின்ற

பாதைகள்தான்

இருண்டு போய்

இருக்கிறதே….!!

அரசு மாறினால்..

அனைத்துமே மாறிவிடும்.

அறிவிலியாய் நம்பிவிட்டோம்…!

வீணான எண்ணத்தால்

விவசாயம் தனைத் தொலைத்து

வீதியிலே இறங்கி

விடியலுக்காய் கோசமிட்டோம்….!!

கண்ட பயன் என்ன?

புது அரசு வந்தது…..

புதிதாய் சட்டங்கள் முளைத்தன..!

பக்கத்து வீட்டு பண்டார

பட்டப்பகலில் காணாமல் போனதும்,

சில்வா சிறைப்பிடிக்கப்பட்டதும்,

கடத்தல்களும்,கைதுகளும்

சிறைகளும்,சித்திரவதைகளும்…..

அச்சமூட்டும் நிகழ்வுகள்.

போனவர்

எப்போது திரும்ப வருவார்கள்?

தெரியவில்லை…

களனிகங்கையிலே பிணங்கள்…..

சூட்டுச் சத்தங்கள்….

மீண்டும் எதிர்ப்பு ஊர்வலமா? – ஐயோ

நினைக்கவே நெஞ்சம்

நடுங்குது…

ரணில் ஐயா

வென்றுவிட்டார்…!

தடயமும் இல்லாமல்

தந்திரமாய் அழிக்கிறாரே…!!

தமிழ் மக்களை அப்போ

என்னவெல்லாம் செய்திருப்பார்….?

சீனாவாம் ஜப்பானாம்

இந்தியா கூட ஒருதொகை

தருகுதாம்….!!

மேற்கு நாட்டினருடன்

பேசித் தீர்க்கிறாராம்…

இவையெல்லாம் இருக்கட்டும்….

சோத்துக்கு என்ன வழி?

தொலைந்த தூக்கத்துடன்

நாங்கள் இங்கே….!!

 -கார்த்திகை

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )