
மஹிந்த தம்பதி போல் ரணில் தம்பதியும் உலகம் சுற்றத் தொடங்கியுள்ளது
மஹிந்த தம்பதி போல் ரணில் தம்பதியும் உலகம் சுற்றத் தொடங்கியுள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான குமார வெல்கம, பிரித்தானியாவுக்கு ஜனாதிபதியுடன் 8 பேர் ஏன் சென்றார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதிசபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் கூடிய போது விகாரைகள் மற்றும் மதத் தலங்களுக்கு மின்கட்டணத்தில் நிவாரணம் வழங்கல் குறித்து எதிர்தரப்பினர் கருத்துக்களை முன்வைக்கும்போதே இவ்வாறு தெரிவித்த குமார வெல்கம் எம்.பி. மேலும் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிரந்தி ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு அரசமுறை பயணங்களை மேற்கொண்டார் இறுதியில் என்னநடந்தது?.நாடு மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர் கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தனது மனைவியான மைத்ரியுடன் வெளிநாடுகளை சுற்றத்தொடங்கியுள்ளார்.
பிரித்தானியா மகாராணிக்கு அஞ்சலி செலுத்த ஜனாதிபதிரணில் விக்கிரமசிங்கவுடன் 8 பேர் ஏன் சென்றார்கள்?
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதை போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட கூடாது. இதனை அவருக்கு ஆளும் தரப்பினர் தெரிவிக்க வேண்டும் .
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. .அதி சொகுசு வானங்களில் செல்லும் தேரர்கள் தான் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.சாதாரண விகாரைகளில் உள்ள தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.வறுமை நிலையில் உள்ள விகாரைகளுக்கு மின்கட்டண அதிகரிப்பில் ஏதாவதொரு வழிமுறையில் நிவாரணம் வழங்கப்படுவது அவசியம் என்றார்

