
ஐ.நா.விடயத்தில் ஏன் இந்த நிலைப்பாடு; அன்று ரணில் ஆதரவு இன்று நிராகரிப்பு
நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக பொருத்தமான உள்ளக பொறிமுறை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் அரசாங்கமும் இருப்பதாகவும், இந்த நிலைப்பாட்டையே வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் அறிவித்துள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்று நேற்று அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
”நல்லாட்சி காலத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரவை வழங்கியது. இந்நிலையில் தற்போது அதனை எதிர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதியே நல்லாட்சி காலத்தில் பிரதமராக இருந்தார். அப்படியாயின் ஜனாதிபதியின் நிலைப்பாடும் இதுவா?” என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் பத்திரண கூறுகையில்,
வெளி பொறிமுறையானது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது. இதனால் நாங்கள் உள்ளக பொறிமுறையின் கீழ் இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட பொருத்தமான பொறிமுறை மூலம் இந்த பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் அரசாங்கத்தினரும் உள்ளனர். அந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜெனிவாவில் கருத்தை முன்வைத்துள்ளார் என்றார்.