பொழுது விடியாதா?

பொழுது விடியாதா?

மேற்குப் பக்கமாக, வாசிகசாலைப் பக்கம் போகும் ஒழுங்கையும் குஞ்சம்மா கடையடியிலிருந்து வரும் குச்சொழுங்கையும், தென் கிழக்கில் பொதுக் கிணத்தடிக்குப் போகும் பாதையும் சந்திக்கும் முக்கில், வடக்குப்புறம் பார்த்த வீடுதான் பத்மாவதியுடையது. வீடு என்றால் ஆடம்பரமாக எதுவுமில்லை. வெளிநாட்டுப் பகட்டு எதுவும் தொடாத சாதாரண ஓட்டு வீடு. முன்பக்கம் முழுவதும் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் ரோசாக்களும், செவ்வந்தியும், எக்சோறாக்களும், கத்தரிப்பூ நிறத்தில் சங்குப் பூவும், விதம் விதமான செவ்வரத்தைகளும், அந்தச் சூழலையே சுகந்தமாக்கும் மல்லிகை, முல்லை, நந்தியாவட்டை,இருவாட்சி, இன்னும் என்னென்னவோ பெயர் தெரியாத பூங்கன்றுகளும் குரோட்டன் செடிகளுமாக அந்த இடம் ரம்மியமாகக் காட்சியளிக்கும்.வளவின் எஞ்சிய பகுதி முழுவதிலும் மா, பலா, வாழை, தென்னை, கமுகு, எலுமிச்சை, மாதுளை, நெல்லி, கொய்யா என்று வைத்து பச்சைப் பசேலென்று கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்மையாக இருக்கும்.

அதிகாலையிலேயே எழும்பி வீட்டு வேலைகளை முடித்து, குளித்து தயாராகிவிட்டாள் பத்மாவதி என்ற, பத்மா என்று எல்லோருக்கும் தெரிந்த, இப்போது ‘பத்து ரீச்சர்’ ஆக மாறிய பத்மா. நேரம் காலை ஐந்தைத் தாண்டிவிட்டது. பொழுது புலர்ந்தும் புலராத நேரம். சைக்கிளைத் தள்ளியவாறு கேற்றைத் திறந்தாள் பத்து. கிரீச்சிட்டு அழுதது கேற்.
“கொஞ்சம் எண்ணை போடச்சொல்லி அப்பாட்டைச் சொல்ல வேணும். கையோட, கறள் கட்டமுதல், தகரத்துக்கும் பெயின்ற் அடிக்க வேணும்.”

நாகரீகமான இரும்புக் கேற்தான். ஆனால், பாதுகாப்புக்காகவும், போய் வருபவர்கள் கண்ணில் விழுந்து எழும்பாமல் இருக்கவும் கேற்றில் தகரப் படல் அடிக்கப்பட்டிருக்கிறது. ஒழுங்கை ஆள் அரவமில்லாமல் நிசப்தமாக இருந்தது. இடதுபுற வேலிகளில் இருந்த சீர்மைக்கிளுவை மரங்களும், வலதுபுறமாக இருந்த பூவரச மரங்களும் சடைத்து வளர்ந்து ஒழுங்கையின் மேல் விதானம் ஆகாயத்தைப் பார்க்க முடியாதவாறு மறைத்தன. சிலுசிலுவென்று வீசிய இதமான காற்றும், ஆளரவமற்ற அமைதியும், பறவைகளின் கீச்சொலியும் மனதை அள்ள, துரிதமாக அந்த இடத்தைக் கடந்து போக மனது வரவில்லை. சற்று தூரம் சைக்கிளைத் தள்ளியவாறே இயற்கையை ரசித்தவாறு நடந்தாள் பத்து. மனதில் என்னென்னவோ எண்ணங்கள் வந்து போயின. கறவை மாடொன்று எங்கோ ‘அம்மா…!’ என்று குரலெழுப்பியது.

இன்னும் கொஞ்சத்தூரம் போனால் இப்படியான இயற்கையழகைக் காண முடியாது. எல்லாமே புதுப்பணக்காரர் வீடுகள். புதிது புதிதாக முளைத்த அழகழகான மாடி வீடுகள், பங்களாக்கள்… வண்ண வண்ணப் பூச்சுப் பூசிய சுற்று மதில்களும், கேற்றுக்கருகில் விதானமும், திண்ணையும் கூடிய புது மாதிரியான அமைப்பும், உள்ளே வீடுவரை சலவைக்கல்லில் இழைத்த தரையும், பெரிய பெரிய தொட்டிகளில் வைக்கப்பட்டிருக்கும் அழகழகான பூமரங்களுமாக…. அப்பப்பா… இப்படியான வீடுகளை அவள் படங்களில்தான் பார்த்திருக்கிறாள்.

நாடு எப்படித்தான் மாறிப்போய்விட்டது? முன்பெல்லாம் இந்த இடத்தில் குடிசை வீடுகளும், சின்னச் சின்ன வீடுகளும்தான் இருந்தன. நண்டும் சிண்டுமாக பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். இந்தப் பகுதி எப்போதும் கூச்சலும் ஆரவாரமுமாக கலகலவென்று இருக்கும். இந்த வீதி நெடுகிலும்வெட்டையும், பற்றைகளும், கலட்டிகளுமாக பண்படுத்தப்படாத நிலங்களாகத்தான் இருந்தன. ஆடு, மாடுகளை மேயக் கட்டியிருப்பார்கள். இப்போது குழந்தைகள் என்று யாரையும் தெருவில் பார்க்க முடிவதில்லை. அவர்களும் ரிவியும், ‘ஒன்லைன்’ விளையாட்டும், மொபைல் போனில் அரட்டையும் என்று எப்போதும் ‘பிஸி’யாக இருப்பார்கள். வெளிநாட்டுப் பணமும், அந்நிய நாட்டுத் தொடர்பும், ஏன் வயோதிபர்கள்கூட அடிக்கடி பிள்ளைகளைப் பார்க்கவென்று வெளிநாடு போய் வருவதும் மனிதர்களையும், அவர்களின் பழக்க வழக்கங்களையும், வாழும் சூழலையும் அடியோடு மாற்றி விட்டன.

பழசை அசைபோட்டவாறு சைக்கிளை மிதித்ததில் மூன்று மைல்தூரத்தைக் கடந்து வந்தாயிற்று. போகவேண்டிய இடம் வந்துவிட்டது. சைக்கிளால் இறங்கி கேற்றைத் திறப்பதற்கிடையில் சரசக்கா கேற்றைத் திறந்தா. வீட்டுக்கும் கேற்றுக்குமாக நடையாய் நடந்திருப்பா போல. தேவையற்ற பதற்றம் இன்னமும் முகத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. பட்டுப் புடவையிலும் அணிந்திருந்த கொள்ளை நகைகளிலும் அழகாக ஜொலித்தா அவ.
“எங்க வராம விட்டிடுவியோ எண்டு பயந்து போனன்.”

முன்னால் விறுவிறுவென்று வீடு நோக்கி நடந்தவவின் பின்னால் சைக்கிளைத் தள்ளியவாறு பத்மா. பின் கொய்யகம் விட்ட சேலையுடன்கடகத்தை இடுப்பில் வைத்து அரக்கப்பறக்க தோட்டத்துக்கு ஓடும் முன்பிருந்த சரசக்காவின் உருவம் ஏனோ சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது.நாலு பிள்ளைகளும் வெளிநாட்டில். புதிதாகக் கட்டிய மாளிகையில் அம்மாவை அமர்த்தி அழகு பார்க்கிறார்கள். வீட்டுக்குக்காவலும் ஆயிற்று. பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அக்கா புடவைகளாகவும் நகைகளாகவும் வாங்கி அடுக்கியிருக்கிறா.

“என்ன இண்டைக்கு பேந்தப் பேந்த முளிச்சுக்கொண்டு நிக்கிறாய்? அம்மா அந்த றூமில இருக்கிறா. நீ வந்துதான் பாத்ரூமுக்கு கொண்டு போக வேணுமாம்…… போ….! கூட்டிக்கொண்டு போ!”
ஃபிரிஜில் இருந்த மல்லிகைச் சரத்தை எடுத்துகொண்டையில் செருகியவாறு சொன்னா சரசக்கா.
“சிலவேளை வரப் பிந்தும்….. வேலையளை முடிச்சிட்டு, உனக்கு ஒரு சோறும் வடிச்சு கறியும் வைச்சிடு. சாமானுகள் எங்கெங்கை கிடக்கெண்டு தெரியுந்தானை…..?அம்மாவுக்கு எப்பன் புளிக்கஞ்சி காச்சிக்குடு…. வாய்க்கு ருசியா எப்பன் இதம்பதமா வேணுமெண்டவா…… நீங்கள் வெளிக்கிட்டிட்டியளே…! பின்னை போய் ஏறுங்கோவன்…, கதவைப் பூட்டி வைச்சிரு…, அம்மாவைத் தனிய விடாதை…”
சரசக்கா அங்கையும் இங்கையுமாகப் பரபரத்தபடி உத்தரவுகளைக் கொடுத்தா.பொன்னுச்சாமி அண்ணர் முந்தியே ஒரு வாயில்லாப் பூச்சி. சரசக்காவின் வல்லமையில்தான் குடும்பம் ஓடியது. அம்மாவின் சொல்பேச்சுத் தட்டாத பிள்ளையள். எல்லாரும் வெளியாலபோன பிறகு சரசக்காவின் மதிப்பு மிகவும் உயர்ந்து விட்டது. அண்ணர் மறுபேச்சுப் பேசாமல் போய் காரில் ஏறிக்கொண்டார். கடைசிமுறையாக கண்ணாடிமுன் நின்று ஒரு ‘ஃபைனல் ரச்அப்’ கொடுத்தபின் சரசக்காவும் காரில் ஏறினா. ஓட்டுனர் பூப்போல அலுங்காமல் குலுங்காமல் காரை எடுத்தார். சலவைக்கற்களின் மீது ஓடி கேற்றைத் தாண்டி மறைந்தது கார்.

காலையில் வந்து பார்வதி ஆச்சியைக் கவனிக்கும் வேலையையும் சேர்த்துச் செய்கிறாள் பத்து. இப்போதெல்லாம் முதியவர்களாகிவிட்டபெற்றவர்களை பிள்ளைகள் தாங்களே கவனித்துக் கொள்வது அருகி விட்டது. காசு இருந்தால் எல்லாமே நடக்கும். ஆச்சியின் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்தபின் ஒரு குட்டிச் சமையல். அதுவும் முடிந்தபின் செய்வதற்குப் பெரிதாக வேலை ஒன்றுமில்லை. இத்தனை பெரிய வீடு சத்தம் சலார் எதுவுமின்றி அமைதியோவென்று இருந்தது. பத்துவுக்கு அமைதி பிடிக்கும்தான்… அது இப்படியான ஒரு நிசப்தமல்ல.தனது வீட்டின் பின் வளவில், பச்சைப்பசேலென்ற மரங்களின் கீழ் கதிரையில் அமர்ந்து, குருவிகளின் கீச்சொலிகளையும் இளங்காற்றையும் அனுபவித்தபடி புதுமைப்பித்தன் கதைகள் படிப்பது மிகவும் பிடிக்கும். அதிலும் அப்போது மழைத்துளிகளும் விழுந்தால்..? அதிலிருந்து எழும் மண்வாசம்…, அடடா..,,!! அதற்கு எதுவுமே ஈடாகாது.

பிந்தி வருவோம் என்றவர்கள் நேரத்திற்கே வந்து விட்டார்கள். அத்துடன் ஆச்சியைப் பராமரிக்கும் அன்றைய வேலை முடிந்தது. மறுபடியும் வீடு நோக்கிய பயணம். குறுக்குப் பாதையால் போவது என்று தீர்மானித்தாள் பத்து. விரைவாக வீடு போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்தினால் அல்ல. முடிந்தவரை எங்கள் மண்ணின் எல்லாப் பகுதிகளையும் பார்க்கவேண்டும் என்ற அடிமனத்து ஆசைதான் அதற்குக் காரணம். வழியில் தெரிந்தவர்கள் இருவர் எதிர்ப்பட்டனர்.
“என்ன பத்து ரீச்சர்! பாறுவதி ஆச்சியைப் பாத்திட்டு வாறியள் போல….”
“ஓமக்கா…! வேலை முடிஞ்சுது. வீட்டை போறன்….”
மரியாதையாக, சைக்கிளில இருந்து இறங்கியவாறு, சொன்னாள் பத்து.
மீண்டும் சைக்கிளில் ஏறி உழக்க முன்பே சத்தமாக அவர்கள் பேசிய இரகசியம் காதில் விழுந்தது.
“இவளுக்கென்ன….!! பிள்ளையோ குட்டியோ….? கலியாணமும் கட்டேல்ல…. ரியூசன் குடுக்கிறது காணாதெண்டு இப்பிடி கிழடுகளைப் பராமரிக்கிற வேலையும் செய்து உழைக்கிறாள்…….. போற போற இடங்களிலயே சாப்பாடும் கிடைச்சிடும்……. தேப்பன்காரனும் விட்டிட்டு இருக்கிறான்…..”
மற்றவா ஏங்கிப்போனா. எனக்குத் தெரியாதது இவவுக்குத் தெரிந்திருக்கே என்று.
“ மெய்யே,,,,,!! அப்ப உவ முதிர் கன்னியே……!! பின்ன, உந்தக் காசை என்ன செய்யிறாவாம்….?
“ஏதோ ‘சரிட்டி’யாம். கஸ்ரப்படுற புள்ளையளை தன்ரை செலவிலை படிப்பிக்கிறாளாம். பெண்டுகளா இருந்து கஸ்டப்படுகிற குடும்பங்களுக்கும் உதவுறாளாம். அதோட….”
குரலை இன்னும் கொஞ்சம் தழைத்து…..
“உவவைப் போல…. வேற… ஏலாதாக்களும் இருக்கினம் தானே? அவைக்கும் குடுக்கிறாள் எண்டு கேள்வி…..”
அவர்களின் குரல்கள் தேய்ந்து மறைந்தன.

பத்மாவுக்கு இவையெல்லாம் புதிதில்லை. இளமைக்காலத்தில் பத்துவும் கனவுகள் கண்டிருக்கிறாள். ராஜகுமாரனைக் கல்யாணம் செய்துகொண்டு மாளிகையில் ‘செற்றில்’ ஆவதுபோல. அந்த வயதிற்கேயுரிய…, வாயிற்கும் வயிற்றுக்குமாக வாழும் மத்தியதரக் குடும்பத்திலுள்ள இளம் பெண்கள் காணும் கனவு. யதார்த்தம் வேறாக இருந்தது. நன்றாகப் படிக்கக் கூடியவள் பத்து. சாதாரண தோட்டக்காரனாக இருந்தாலும் பரந்த சிந்தனை கொண்டவர் அவளது தந்தை. பத்துவுக்கு புத்தக வாசிப்பை அறிமுகம் செய்து வைத்ததும் ஊக்குவித்ததும் அவர்தான். ஆண்கள் மட்டுமே புழங்கும் ஊர் வாசிகசாலையின் அத்தனை புத்தகங்களையும் பத்து வாசித்துத் தள்ளக் காரணமானவரும் அவர்தான். நேரகாலம் பார்க்காமல் ஓடியோடி புத்தகங்களை எடுத்து வந்து கொடுப்பார்.

என்னத்தைப் படித்து என்ன? இடப்பெயர்வுகளும், மூலகாரணியான தரப்படுத்தலும் பல்கலைக்கழக கனவுக்கு ஆப்பு வைத்தன. கற்றறிவும் பட்டறிவும் சேர்ந்து சமூகப் பிரச்சனைகளையும் நாட்டு நிலவரத்தையும் தெளிவாகப் புரிய வைத்தபோது,சமூக மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்ற பிரக்ஞையுடன் தனக்கான பாதையைப் பத்து தேர்ந்தெடுத்தாள். ஊரோடு ஒத்ததாய்,மனதேயில்லாமல் ஒற்றை மகளை விட்டனர் பெற்றோர். காலம் ஓடியது. எத்தனையோ இடங்களில் மயிரிழையில் உயிர் பிழைத்து, இறுதியில் வீடு வந்து சேர்ந்தபோது காலன் அம்மாவை வாரிக்கொண்டு போயிருந்தான். பத்துவின் ஒரு கலியாணம் காட்சியைப் பார்த்துவிட்டு கண்ணை மூடுவதுதான் அப்பாவின் ஆசை. பத்துவுக்கு இதில் எந்த நாட்டமும் இல்லை என்று தெரிந்தபிறகு வற்புறுத்துவதை விட்டுவிட்டார்.

கடந்தகால நினைவுகளின் ரணம் ஆறப்போவதில்லை என்பதை கண்கூடாக பக்கத்திலிருந்து பார்த்ததன் பின் பத்துவுக்கு ஆதரவாக மாறிப்போனார் அவளது தந்தை. இப்போது பத்து ஒரு தனித்து இயங்கும் பத்திரிகை நிருபர், பகுதி நேர ரியூசன் வாத்தியார், வயோதிபர்களைப் பராமரிப்பவர் என்று பல வேலைகளுக்குச் சொந்தக்காரி.
‘ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற கனவு மட்டும்தான் பத்துவுக்கு. இதனால்…. இப்படியான எந்தக் குத்தல் பேச்சுகளையும் அவள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இத்தனை வருடங்களில் எத்தனை வகையான மனிதர்களைப் பார்க்கும் அனுபவத்தைக் கடந்துவந்திருக்கிறாள் அவள்?

கலட்டியின் ஒற்றையடிப் பாதையைக் கடந்து செம்மண்பாதையில் ஏறியபோது எதிரே பத்துப் பதினொரு வயது மதிக்கத்தக்க சிறுமி வருவது தெரிந்தது. கிட்ட வந்தால்…. ‘அட…!! தர்சா…..!! என்னட்டைப் படிக்கிற பிள்ளை!’ தன்னைப் பார்த்ததும் தர்சி ஏனோ திடுக்கிட்டாற் போல் இருந்ததாகத் தோன்றியது பத்துவிற்கு. கையசைத்துக் கடந்து போனாலும் ஏதோவொரு உறுத்தல். என்னவாக இருக்கும்? உண்மையில், சிலநாட்களாகவே மனதின் அடிவாரத்தில் ஏதோவொன்று அரித்துக் கொண்டிருப்பதான ஒரு உணர்வு. எந்த வேலை செய்தாலும் அது விலகிய பாடில்லை. ‘நமநம’வென்று எந்த நேரமும் ஏதோவொன்றை தான் சரியாகக் கவனிக்காத, தப்பாக இருப்பதான உணர்வு பத்துவை சங்கடப்பட வைத்துக் கொண்டிருந்தது. கண் பார்த்து மூளைக்குச் சொல்லியும் அதை மூளை சரியாகப் பதிவுபண்ணாத ஏதோ ஒன்று. இந்த உணர்வு ஆபத்தானது என்பதை கடந்த காலங்களில் பத்து பல தடவைகள் கண்ணாரக் கண்டிருக்கிறாள்.

மூச்சிரைக்க சைக்கிளை உதைத்தபடி பின்னேர ரியூசனுக்குப் போகும் வழியில், அந்த விடலைக் கூட்டம்.ஒருத்தனின் ‘மொபைல்’ இல் எல்லோரும் நெருக்கியடித்துநின்று எதையோ பார்த்துக் கொண்டிருந்தது. பத்துவைப் பார்த்ததும் பதட்டமாகினர். இவர்கள் வேறு யாருமல்லர். சில உயர்தர வகுப்பு மாணவர்கள்தான். வசதியைத் தம்பட்டமடிக்க மோட்டார் சைக்கிள்கள் வாங்கிக் கொடுத்திருந்தனர் பெற்றவர்கள். ஊர் சுற்றுவதும், வயது வித்தியாசம் இல்லாமல் தெருவில் போகும் பெண்களுக்கு பகிடி விட்டு பல்லிளிப்பதுமாக காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இப்படி அலையவிடும் இவர்கள் பெற்றவர்களைச் சொல்ல வேண்டும். இப்போது ரியூசனில் கற்பிக்கும் ஒரு இளம் ஆண் ஆசிரியருடன் கொஞ்சம் நெருக்கமாக இருக்கிறார்கள்.

‘மொபைலில் என்ன பார்த்தார்கள்? ஏதும் பார்க்கக் கூடாத விசயமோ….? என்னைப் பார்த்து பதறிப் போகிறார்கள் என்றால் எங்களுக்குத் தெரிய வரக்கூடாத ஏதோவொன்றுதான்…’
மனம் ஒரு நிலையில்லாமல் தவித்தது.வகுப்பில் நன்றாகப் படிக்கும் காவியாவை இன்றும் காணவில்லை. இரண்டு மூன்று வகுப்புகளுக்கும் வரவில்லை. ‘தெரியேல்லை மிஸ்..’ என்ற அவளது நண்பி ஏனோ பத்துவின் கண்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தாள். வகுப்பு முடிந்து எல்லோரும் போனபின்,தானும் கதவைப் பூட்டிக்கொண்டு புறப்படத் தயாரானாள் பத்து. அப்போது காவியாவின் அப்பா வந்தார்.

“ரீச்சர்! ரியூசன் காசையும் குடுத்திட்டு பிள்ளையையும் கூட்டிப் போவம் எண்டு நினைச்சன். போட்டாவே…? கொஞ்சக் காலமா ஸ்பெசல் வகுப்பு எண்டு பிந்தி வாறவா….. இண்டைக்கு இல்லையோ…?”
ஸ்பெசல் வகுப்பு ஒருநாளும் நடக்கவில்லை… பிள்ளை படிக்கவே வரவில்லை என்பதும் வீட்டிற்குத் தெரியவில்லை….
மனம் பதைபதைத்தது. ஒரே மூச்சாக சைக்கிளை மிதித்து, வழியிலேயே காவியாவின் நண்பியைப் பிடித்து ஓரங்கட்டினாள் பத்து.வீம்பாக எதையுமே சொல்ல மறுத்தாள் அவள். அதட்டி, மிரட்டி, கெஞ்சி என்று பலவழிகளில் கேட்டும் பிடிவாதமாக இருந்தாள் அவள். ஆனால், ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்பது தெரிந்தது. இறுதியில், ‘காவியாவிற்கு ஏதாவது நடந்தால் உன்னைத்தான் பிடிப்பார்கள்’ என்று பயங்காட்டினாள்.இறுதியில், தன் காதுகளையே நம்ப முடியவில்லை பத்துவால். கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது.

“கொஞ்சப் பேர் சேர்ந்து அவவைக் கெடுத்துப் போட்டாங்கள் ரீச்சர்…!! வீடியோ எடுத்து வைச்சு இன்னும் அவளை வெருட்டிக் கொண்டு இருக்கிறாங்கள்….” மெல்ல உடைந்து அழ ஆரம்பித்தாள் அவள். வீடியோ என்றதும் அந்தப் வழியில் பையன்கள் மொபைலைப் பார்த்த விதம் சட்டென ஞாபகத்திற்கு வந்தது.
“கனக்கப் பிள்ளையளை பள்ளிக்கூடத்தில, ரியூசனில எண்டு இப்பிடி வெருட்டி கெட்ட வேலை செய்யிறாங்கள்…சின்னப் பிள்ளையளையும் தான்.. ஆருக்காவது சொன்னால் ‘வட்ஸ்அப்’பில போடுவம், பிறகு குடும்பமா சாகுங்கோ என்னுறாங்கள். பயமா இருக்கு ரீச்சர்….என்ரை வீடியோவும் இருக்கு…” குமுறி அழுதாள்.
“கனக்கப் பேரோ….? ஆரார்….? பயப்படாதையும்…. உம்மட பேர் வராது… ஆர் இதைச் செய்யிற நாயள்…? பயப்படாம சொல்லும்….” படபடப்புடன் வினவினாள் பத்து.

அந்த ஆசிரியரும், அதே காலிக் கும்பலும்தான் இதற்குக் காரணமானவர்கள் என்ற உண்மை வெளிவந்தது. தோண்டத்தோண்டப் பூதம். அந்த வக்கிரம் பிடித்தவர்கள் என்னென்னவெல்லாம் செய்திருக்கிறார்கள்? கேட்கக்கேட்க தலை சுற்றியது.
“ஐயோ….!! எத்தனை ஆயிரம் பேர் என்னென்ன கனவுடன் கட்டியெழுப்பிய பூமி…. இன்று ஓநாய்களின் கூடாரமாகி சின்னாபின்னமாகிக் கிடக்கிறதே…”
தர்சியின் கண்களிலிருந்த தவிப்பு இப்போது புரிந்தது. குற்ற உணர்வாக இருந்தது. இதையெல்லாம் முன்பே சற்றுக் கவனித்து இந்தப் பிள்ளைகளை பிரச்சனைப்படாமல் காத்திருக்கலாமோ….?
‘இந்தக் குழந்தைகளுக்கு உதவி வேண்டும். ஆதரவு வேண்டும்.தவறு செய்பவர்களை எதிர்த்து நிற்கும் துணிச்சலை பெண் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். பெற்றவர்கள் பிள்ளைகளின் சிறு அசைவிலுமுள்ள மாறுதலை விளங்கிக் கொள்ள வேண்டும்.’

எப்படி யோசித்தாலும் இவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க என்ன செய்வது என்று புலப்படவில்லை. முன்பானால்..? நிலைமையே வேறு. இப்படி ஒன்று நடந்திருக்குமா.. ? இப்போ, காவற்துறையில் காசைக்காட்டி தப்பி விடுவார்கள். கொஞ்சநாளில் இவர்களின் அயோக்கியத்தனம் மறக்கடிக்கப்பட்டு விடும். இந்தப் பெண் பிள்ளைகளின் கதி…?
பிரச்சனை அம்பலமான உடனேஊர் ஆட்டம் கண்டுவிட்டது. அதிர்ச்சியும் ஆத்திரமுமாக எல்லோரும் குதிகுதியென்று குதித்தார்கள். ஆனால்… பின்னர்…??காவற்துறை அவர்களைக் கைது செய்ததுடன் ஏதோ எல்லாமே சரியாகி விட்டது அல்லது சரிப்படுத்தப்படும்என்றதொரு உணர்வுடன்ஓரிரு கிழமைகளில் எல்லோரும் அமைதியாகி விட்டனர். இதைப் பற்றிய பேச்சே இல்லை.

இப்போதெல்லாம் பத்துவால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை. கண்ணுக்குத் தெரியாத ஆபத்துக்களால் சூழப்பட்டிருக்கும்பெண் குழந்தைகள், பெண்கள் பற்றிய சிந்தனைகளால் அலைப்புற்றாள் பத்து. இரகசியமாக பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் அநேகமாக குடும்ப உறுப்பினர், உறவினர், தெரிந்தவர்களாகத்தான் இருக்கும் என்கிறது உளவியல் மருத்துவம். பெண்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.அப்போதுதான் பெண்குழந்தைகளை அவர்களால் சரியாக வழிநடத்த முடியும், ஆண் குழந்தைகளை பெண்களை மதிக்க சொல்லிக் கொடுத்து வளர்க்க முடியும். ஊர் ஊராக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஒன்று இருக்கிறது. முதலில் பெண்கள் இதன் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். கோவிட் பற்றி சொன்னதும் மக்கள் புரிந்து கொள்ளவில்லையா..?

எண்ண ஓட்டங்களினால் அலைப்புற்று புரண்டு புரண்டு படுத்தாள் பத்து. நித்திரை வர மறுத்தது. விடியலுக்கு தொலைதூரம் இருப்பதாகவும் நாங்கள் வெறுமனே பார்வையாளராக இருப்பதாகவும் பட்டது. மீண்டும் ஒரு நெடிய இரவு.

-கொற்றவை

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )