
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இரகசியப் பொலிஸ் படையாக இயங்கியது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமூகத்தில் நீதியை நிலைநாட்டும் ஒரு நிறுவனம் அல்லாமல், இரகசிய பொலிஸ் படையாக செயற்பட்டதாக 43 ஆம் படையணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை மேற்கொள்வதற்கு கணக்காய்வாளர் நாயகத்திற்கு நிபுணத்துவ ஆதரவு வழங்கப்பட வேண்டும். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் செயற்பாடுகள் வெளிப்படையானது மற்றும் உண்மையானது என பாராட்டினார்.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதியின் கீழ், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சமூகத்தில் நீதியை நிலைநாட்டும் ஒரு நிறுவனம் அல்லாமல், இரகசிய பொலிஸ் படையாக செயற்பட்டது. புதிய அமைச்சரின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இதேபோன்று தொடர்ந்தும் செயற்படுகின்றனர்.
எனவே இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையங்கள் லிமிடெட் நடவடிக்கைகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பாரபட்சமற்ற விசாரணையை எதிர்பார்க்க முடியாது.
விசாரணைகளை நடத்துவதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உரிய நிபுணத்துவம் இல்லை. எனவே அரச தலைவர் மற்றும் மின்சக்தி அமைச்சர் இந்த கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடவில்லை என்றால், கணக்காய்வாளர் நாயகத்திற்கு கடுமையான நடவடிக்கை மற்றும் நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொள்ள ஆதரவளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.