
திருக்கோணேஸ்வர ஆலயத்தை முழுமையாக கைப்பற்றும் முயற்சியில் அரசு
திருக்கோணேஸ்வர ஆலயத்தினை முழுமையாக கைப்பற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்ளுகிறது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். தேவாரம் பாடப்பட்ட தலம், எமது அடையாளம் இவ்வாறு மோசமாக தொல்பொருள் திணைக்களத்தால் அபகரிக்க நினைப்பதனை தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.
ராஜபக்ஷ குடும்பம் எதனைத் தொடர்ச்சியாக செய்துகொண்டு இருந்ததோ, அதன் தொடர்ச்சியை தற்போது வந்த ஜனாதிபதி செய்வதாக எமக்கு தெரிகிறது. இந்த நாட்டில் நல்ல சுமூகமான சூழல் ஏற்பட வேண்டுமானால் ஜானதிபதி உடனடியாக தலையிட்டு கோணேஸ்வர ஆலயத்தினை தொல்பொருள் திணைக்களம் அபகரிப்பு நடவடிக்கையினை தடுத்து நிறுத்த வேண்டும்.
அவ்வாறு செய்ய தவறினால் நாங்கள் குற்றஞ்சாட்டியதைப்போன்று இவர் ராஜபக்ஷ குடும்ப நிகழ்ச்சி நிரலை தான் தொடர்ச்சியாக செய்கின்றார் என்பதை பறைசாற்றக்கூடிய நிகழ்வாக இது அமையும். அத்துடன் இந்த அரசாங்கத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு வழங்காது என்பதை எமது தலைவர்கள் எடுப்பார்கள்.
எங்களுடைய மக்களை கிராமங்கிராமமாக, பங்கர் பங்கராக எங்களுக்கு உயிர் பயத்தினை காட்டிய கோட்டாபய ராஜபக்ஷ இன்று உயிர் பயம் என்றால் என்ன? சிறை வாழ்க்கை என்றால் என்ன? என்பதனை நாடு நாடாக ஓடித்திரிந்து ஒழிந்து இருக்கிறார்.
எங்கள் மக்களுக்கு செய்த துன்பங்களுக்கு இந்த ராஜபக்ஷ குடும்பம் இவ்வாறு தான் அலைந்து திரிவார்கள். ஆனால் இவர்களை புதிய ஜனாதிபதி காப்பாற்ற நினைப்பாராக இருந்தால் அவருக்கும் இந்த நிலை உருவாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எங்கள் உறவுகளின் ஆத்மாக்கள் இவர்களை சும்மா விடாது.
கோட்டாவை மீண்டும் நாட்டிற்கு கொண்டுவர மொட்டு கட்சியினர் முயற்சிக்கிறார்கள், இதற்கு சிங்கள மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என நாம் நம்புகிறோம். இவர் நாடு நாடாக ஒழித்து திரிகின்ற சூழல் தான் உருவாகும்.
இவ்வாறு இவர் ஒழித்து திரிகையில் இவர்களுக்கு எதிரான குற்றவியல்கள் நிரூபிக்கப்படடால் நிச்சயமாக வெளிநாடுகளின் சட்டங்கள் ஊடாக கைது செய்யப்பட்டு தண்டனை பெறக்கூடிய சூழல் உருவாகும்.- என்றார்.

