புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டாகும்!

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் சர்வதேசத்தை ஏமாற்றும் தந்திர விளையாட்டாகும்!

தனது தடைப்பட்டியில் இருந்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை நீக்கம் செய்வதும், நீடிப்பதும் என்பதான அதன் நடத்தையானது எண்ணிக்கை இலக்கங்களுடன் சர்வதேசத்தினை ஏமாற்றும் ஒர் வேடிக்கை தந்திர விளையாட்டையே வெளிப்படுத்தி வருகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிபந்தனைகளின் 1373 கீழ், இலங்கைக்குள் 577 நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 18 அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 316 பேருக்கான தடை நீக்கப்பட்டுள்ளதுடன், 6 புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 13 ஆம் திகதியன்று, இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஐ.நா மனித உரிமைச்சபை கூட்டத் தொடர் உரையில், ‘ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண்.1 இன் கீழ் 2012ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புக்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்படுவதோடு, தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 4 அமைப்புக்கள் தடைப்பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

தற்போது, அடுத்த சில வாரங்களின் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடர் தொடங்க இருக்கின்ற நிலையில் மற்றுமொரு பட்டியல் வெளிவந்துள்ளது. இது சர்வதேசத்தினை ஏமாற்றும் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டையே வெளிக்காட்டுகின்றது.

2014 ஆண்டில் இலங்கை அரசாங்கம், 424 தனிநபர்கள் மற்றும் 16 அமைப்புக்களை ‘பயங்கரவாத பட்டியலிட்டு’ தடைவித்தது. 2015ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் மீண்டும் எண்ணிக்கை இலக்க வேடிக்கை விளையாட்டாக 8 அமைப்புக்களையும், 259 தனிபர்களையும் புனிதர்களாக்கி தனது தடைப் பட்டியலில் இருந்து நீக்கியது.

மீண்டும் 2021ல் புதிய அரசாங்கம் தனது எண்ணிக்கை இலக்க வேடிக்கை விளையாட்டை காட்டியது. 380 தனிநபர்களையும் மற்றும் 7 அமைப்புக்களையும் பயங்கரவாத தடைப்பட்டியலில் இட்டுக்கொண்டதென எமது முன்னைய அறிக்கையொனறில் குறிப்பிட்டிருந்தோம்.

தற்போது வெளிவந்துள்ள புதிய பட்டியலானது, இலங்கையின் வேடிக்கை இலக்க தந்திர விளையாட்டை மீளவும் தொடர்வதனை வெளிக்காட்டுகின்றது.

குறிப்பாக இலங்கையின் இந்த நடத்தையானது 2012ம் ஆண்டு ஐ.நா ஒழுங்குமுறை இலக்கம் 1ஐ, இலங்கை துஸ்பிரயோகம் செய்வதனை நிரூபிக்கின்றது. ஐ.நாவின் நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தொடரும் தடையானது, ‘தமிழீழம்’ என்ற கொள்கை, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் உறுதியுடனும் செயற்படுகின்றோம் என்பதனை சான்று பகிர்வதாவே இலங்கையின் இந்த அச்சம் வெளிப்படுத்துகின்றது.

இலங்கைக்கு வெளியே ‘தமிழீழத்துக்காக’ நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போன்றவர்கள் இன்னும் போராடும் செயற்பாட்டில் உள்ளனர் என்ற இலங்கை இராணுவத் தளபதியின் சமீபத்திய கருத்தும் இதனையே வெளிப்படுத்துகின்றது”என அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )