இலங்கையில் இந்துக்களின் கோயில்கள் அழிக்கப்படுகின்றன அடையாளத்தையும் அழிக்கின்றனர்

இலங்கையில் இந்துக்களின் கோயில்கள் அழிக்கப்படுகின்றன அடையாளத்தையும் அழிக்கின்றனர்

இலங்கையில் அரச அதிகாரத்தைக் கொண்ட சிங்கள பௌத்த பெரும்பான்மையினர், எண்ணிக்கையில் குறைந்த தமிழ் இந்துக்களின் அடையாளத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் அழித்து வருகின்றனர் என்பதே கள யதார்த்தமாகும். எனவே, புது டில்லி இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இந்த இருப்புசார் அச்சுறுத்தலை ஆழமாகப் புரிந்துகொண்டு, பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் தர வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இனச் சுத்திகரிப்புச் சூழல்களில் நிலைமாறுகால நீதியும் மனித உரிமைகளும் எனும் தலைப்பில் புது டில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு உரையாற்றினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இனச் சுத்திகரிப்புச் சூழல்களில் நிலைமாறுகால நீதியும் மனித உரிமைகளும்” என்ற இம்மாநாட்டின் தலைப்பானது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. இலங்கைக்குள் எங்களது கவலைகளைத் தெரிவிக்கப் போதிய வெளி இல்லாததால், வெளிநாடுகளில், குறிப்பாக இந்தியாவின் தலைநகரான புது டில்லியில் உள்ள பல்கலைக்கழகங்களில் பேசுவது தமிழ் மக்களின் போராட்டத்திற்குச் சாதகமான பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நிலையை நீங்கள் இனச் சுத்திகரிப்பு என்றோ அல்லது இனப்படுகொலை என்றோ அழைக்கலாம். ஆனால் இதற்குப் பின்னால் உள்ள கட்டமைப்பைப் புரிந்துகொள்வது மிக முக்கியம்.

இலங்கையில் சுமார் 75% சிங்கள பௌத்தர்கள், 12.5% தமிழர்கள், 6–7% முஸ்லிம்கள் மற்றும் 4% மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ், 75% மக்கள்தொகை கொண்ட சிங்கள பௌத்தர்கள் நிரந்தரப் பெரும்பான்மையாக அமைந்து, அரசாங்கத்தையும் அரச கொள்கைகளையும் முழுமையாகக் கட்டுப்படுத்துகிறார்கள்.

மகாவம்சத்தின்படி, இலங்கையில் தூய்மையான பௌத்தத்தைப் பாதுகாப்பதற்காகப் புத்த பெருமானால் சிங்கள மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். இதன் விளைவாக, சிங்கள பௌத்தர்களைத் தவிர வேறு எவரும் இலங்கையின் எந்தப் பகுதிக்கும் உரிமை கோர முடியாது என்ற மனநிலை நிலவுகிறது.

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்வது, பௌத்தத்தைப் பாதுகாக்கும் அவர்களின் லட்சியத்திற்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

பிரித்தானியர் வெளியேறியதிலிருந்து, தமிழ் தேச அங்கீகாரத்தைச் சிதைக்கும் வகையில் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திரத்திற்கு முன்பிருந்து 1981 ஆம் ஆண்டு வரை, கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் தொகை 800% அதிகரித்துள்ளது. சுதந்திரத்திற்கு முன் கிழக்கில் 80% ஆக இருந்த தமிழ் பேசும் மக்களின் விகிதம் 1981 இல் 30% ஆகக் குறைந்தது.

தமிழர்களில் 90% பேர் இந்துக்கள். தற்போது தொல்பொருள் திணைக்களம் மூலம் வட கிழக்கில் உள்ள பல தொன்மை வாய்ந்த இந்து சமயச் சின்னங்களை பௌத்த இடங்கள் என அறிவித்து, அங்கெல்லாம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகளைக் கட்ட அரசாங்கம் நிதி ஒதுக்கி வருகிறது.

2009 இல் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த போதிலும், தமிழ் தேச அடையாளத்தைச் சிதைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

வழக்கமாக ஒரு இராணுவ சர்வாதிகாரத்திலிருந்தோ அல்லது நிறவெறி ஆட்சியிலிருந்தோ ஜனநாயகத்திற்கு மாறும் சூழல்களிலேயே நிலைமாறுகால நீதி பயன்படும். ஆனால் இலங்கையில் அரசியல் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.மோதலின் அடிப்படைத் தன்மை மாறாமல் தொடர்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பாக அரசே இருக்கும்போது, உள்நாட்டு பொறிமுறை மூலம் நீதி கிடைக்காது. ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் இளவரசர் சையத் அல் உசேன் தனது அறிக்கையில், இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறை வேலை செய்யாது என்றும், குறைந்தது சர்வதேசக் கூறுகள் கொண்ட கலப்புப் பொறிமுறை வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், இலங்கை அரசாங்கமும் ஜனாதிபதியும் இராணுவத்தினர் எவரையும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். சர்வதேசப் புவிசார் அரசியலில் உள்ள வல்லரசுகள், பொறுப்புக்கூறலை நடைமுறைப்படுத்துவதை விட, தங்கள் நலன்களுக்காக மட்டுமே இக்குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துகின்றன.

வரலாற்று ரீதியாக, இந்தியாவையே தங்களைப் பாதுகாக்கும் நாடாக தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய உதவிகள் மூலம் இந்தியாவுக்குப் பலமான செல்வாக்கு உள்ளது.

சிங்கள பௌத்தர்களுக்கும் தமிழ் இந்துக்களுக்கும் இடையிலான மோதலை, ஒரே பண்பாட்டுக்குட்பட்ட விடயமாக இந்திய அரசு பார்க்கக் கூடாது.

இலங்கையில் அரசு அதிகாரத்தைக் கொண்ட சிங்கள பௌத்த பெரும்பான்மையினர், எண்ணிக்கையில் குறைந்த தமிழ் இந்துக்களின் அடையாளத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் அழித்து வருகின்றனர் என்பதே கள யதார்த்தமாகும். எனவே, புது டில்லி இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இந்த இருப்புசார் அச்சுறுத்தலை ஆழமாகப் புரிந்துகொண்டு, பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வுக்கு அழுத்தம் தர வேண்டும் – என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )