15 மில்.ரூபா நிதி மோசடி வழக்கு; நாமலின் வழக்கில் நீதிமன்றம் காலக்கெடு

15 மில்.ரூபா நிதி மோசடி வழக்கு; நாமலின் வழக்கில் நீதிமன்றம் காலக்கெடு

முறையற்ற விதத்தில் ஈட்டிய 15 மில்லியன் ரூபா பணத்தை தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை எந்தவித அறிவுறுத்தல்களும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்குத் அறிவித்தது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணை, 2016 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டு அதன் கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இதன்படி தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று வியாழக்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வேறு வழக்குகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கவில்லை.

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏனைய சந்தேக நபர்களான சுஜானி போகொல்லாகம, நித்யா சமரநாயக்க, சுதர்சன பண்டார ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் நிறைவடைந்து கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், இந்த வழக்குத் தொடர்பில் சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, வழக்கினை பெப்ரவரி 11 ஆம் திகதிக்கு மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் தொடர்பான முன்னேற்றங்களை அறிவிக்குமாறு பணித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )