ஞானசாரரின் ஐ.நா.ஆவணத்தை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள்

ஞானசாரரின் ஐ.நா.ஆவணத்தை பறிமுதல் செய்த சிறை அதிகாரிகள்

சிறையிலுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு செய்வதற்காக கையொப்பமிட்ட ஆவணத்தை அதிகாரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளமைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் இந்த செயற்பாடு சட்டரீதியான உரிமைகளை மீறும் செயற்பாடாகும் எனத் தெரிவித்து சட்டத்தரணி தனுஷ்க சில்வா மற்றும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில் வா ஆகியோர் நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி தனுஷ்க சில்வா மேலும் கூறுகையில்,

நோர்வேயில் உள்ள பிக்சு கிளெப்பே ஆரியமக்க தேரரின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த வியாழக்கிழமை தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று ஞானசார தேரரைச் சந்தித்து சட்ட ஆலோசனை வழங்கினேன். அத்துடன், அவர் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவிப்பதற்காக, அதற்கு எதிர்ப்பு இல்லை என்பதைத் தெரிவிக்கும் ஆவணத்தில் அவரிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டேன். எனினும், அந்த ஆவணத்தின் உள்ளடக்கத்தைப் பரிசோதிக்க வேண்டுமென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர், அது நீதியமைச்சின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது. இதுவரை அந்த ஆவணத்தை அவர்களிடமிருந்து திரும்பப் பெற முடியவில்லை.

கட்சிக்காரருடனான சட்டத்தரணியின் உரையாடல் இரகசியமானது. அந்த ஆவணத்தில் உள்ளதைப் பரிசோதிப்பதற்கு எந்தவொரு நிறுவனத்துக்கும் உரிமை இல்லை. எனவே, எனது தொழில்சார் உரிமையும் ஞானசார தேரரின் உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். இதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதுடன், சட்ட நடவடிக்கைகளையும் எதிர்பார்க்கிறோம் என்றார்.

இதேவேளை, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவிக்கையில்,

ஞானசார தேரரின் அரசியல் தொடர்பில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர் தற்போது சிறைக்கைதியாக இருப்பதால், அவரது உரிமைகளைப் பாதுகாப்பதே எமது பொறுப்பு. சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறுவதற்கும், சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளிடம் முறைப்பாடு செய்வதற்கும் அவருக்கு உரிமை உள்ளது.

அவர் ஆவணத்தில் கையொப்பமிடுவதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு முறைப்பாடு செய்வதற்கும் ஏன் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன? சட்ட ஆலோசனை என்ற காரணத்தை முன்வைத்து நடவடிக்கைகள் தடுக்கப்படுகின்றன.

வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த விடயம் தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கும் அறிவித்துள்ளோம். ஞானசார தேரரின் உரிமைகளைப் பாதுகாத்து, சர்வதேச முறைப்பாட்டுக்கான சந்தர்ப்பத்தை தடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )