முன்னர் கூறியதற்கு நேர்மாறானது; செம்மணிப் புதைகுழி அறிக்கை பொய்யானது; சர்வதேசத்தை ஏமாற்ற சூழ்ச்சி; கோடீஸ்வரன்குற்றச்சாட்டு

முன்னர் கூறியதற்கு நேர்மாறானது; செம்மணிப் புதைகுழி அறிக்கை பொய்யானது; சர்வதேசத்தை ஏமாற்ற சூழ்ச்சி; கோடீஸ்வரன்குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஆராய்ச்சி தொடர்பாக தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவவினால் வெளியிடப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளிலுள்ள விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன.இந்த அறிக்கை உண்மைக்கு புறம்பானது. செம்மணி மனிதப் புதைகுழி விடயம் முதலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆய்வாக

மேற்கொள்ளப்பட்டாலும் தற்போது இதனை மூடி மறைப்பதற்காக, சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான சூழ்ச்சி வேலையாகவே இந்த அறிக்கையுள்ளதென தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி.யான கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றம்சாட்டினார்.

செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களில் உடல்கள் தொடர்பான நீதி விசாரணைகளை ஏதோவொரு விதத்தில் முடக்கும் செயற்பாடாகவே இந்த அறிக்கையுள்ளது இதனாலேயே உள்நாட்டு பொறிமுறை அல்லது உள்நாட்டில் உள்ள நபர்களால் செய்யப்படும் ஆய்வுகள் திருப்திகரமான ஆய்வாக இருக்காது என்பதனை கூறுகின்றோம். இதனாலேயே சர்வதேச விசாரணை, சர்வதேச நிபுணர்களை கொண்டு இந்த மனித புதைகுழிகளை ஆய்வு செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம் எனவும் கூறினார்

பாராளுமன்றத்தில்   இடம்பெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த கோடீஸ்வரன் எம்.பி மேலும் பேசுகையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு ஆராய்ச்சி தொடர்பான 2025/2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் ராஜ் சோமதேவவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது உண்மையில் மாறுபட்டதாக உள்ளது. உண்மைக்கு புறம்பான சில விடயங்களை அந்த அறிக்கை வெளியிடுவதாக நாங்கள் பார்க்கின்றோம். ஆரம்பத்தில் இருந்த முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளை பார்க்கின்ற போது அந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்காது அறிக்கையில் திரிபுபடுத்தப்பட்டதாக உள்ளது.

இதில் விசேடமாக உள்ள விடயம் என்னவென்றால் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மற்றும் அதில் உள்ள செயற்பாடுகள் பின்னர் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு திட்டமிடப்பட்ட முறையில் இந்த ஆய்வாளரினால் மாற்றப்பட்டுள்ளது என்பதனையே நாங்கள் குறிப்பிடுகின்றோம்.

தற்போது வந்துள்ள அறிக்கையின்படி புதைகுழியில் மனித எச்சங்களாக இருப்போர் இயற்கை அனர்த்தத்தினாலும் தொற்றுநோயாலும் அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றே அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதது. இதனால் இதனை உண்மைக்கு புறம்பான அறிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த அறிக்கையுடன் தொடர்புடைய ராஜ் சோமதேவ என்பவர் தொல்லியல் ஆய்வாளரே தவிர, அவர் மருத்துவ, தடயவியல் நிபுணரோ மானுடவியல் தொடர்பானவரோ அல்லது உடற்கூற்று பரிசோதனை பற்றிய அறிவை கொண்டவரோ அல்ல. அவர் தனது அறிக்கையில் தனது ஆராய்ச்சியை விடுத்து அவர் தனக்கு விரும்பியவாறு அதனை வெளியிட்டுள்ளார்.

அவர் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் இந்த விடயங்களில் குறிப்பாக சாதாரண தடைக்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றும் இது குற்றம் தொடர்பான விடயமாக இருப்பதால் அதனை குற்றவியல் பிரதேசமாக கருதியே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் தனது நான்காவது அறிக்கையில் சாத்தியக்கூறு குறைவானதாகவே சுட்டிக்காட்ட விரும்புகின்றார்.

ஆரம்பத்தில் இதனை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டாலும் பின்னர் இதனை மறைப்பதற்காக சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கான சூழ்ச்சி வேலையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

செம்மணி புதைகுழி இந்து மயானமாகவே இருந்துள்ளது. அங்கு புதைக்கப்பட்ட உடல்கள் வித்தியாசமான முறையில் புதைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த சோமவன்ச ராஜபக்‌ஷ இதனை தோண்ட வேண்டும் என்றும் இங்கு 600க்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். அங்கு இதுவரையில் எடுக்கப்பட்ட உடல்களை பார்க்கும் போது 572 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் இப்போது வந்துள்ள அறிக்கையை பார்க்கும் போது 95, 96 காலத்தில் புதைக்கப்பட்டவை அல்ல, 50 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட உடல்களாக இருக்கலாம் என்று சோமதேவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளார். இது எந்த வகையில் உண்மையாக இருக்க முடியும்?

எவ்வாறாயினும் அங்கு தோண்டப்படும் போது நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த நாணயங்கள் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டு காலத்திற்குரியவையே. அதனை அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடவில்லை. அதேபோன்று அந்த உடல்கள் புதைக்கப்பட்ட விதம், ஆரம்பத்தில் புகைப்படங்களில் இருந்த விதமும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களும் மாறுபட்டவையாக இருக்கின்றன. பல விடயங்களை மறைத்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவே இருக்கின்றது. அவர் ஆய்வாளரே தவிர மருத்துவ நிபுணரோ மானுடவியல் விடயங்களை கையாளும் நிபுணரோ அல்ல. ஆனால் உடற்கூற்று பரிசோதனையை செய்தது போன்றே அவர் அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது?

ஏதோவொரு விதத்தில் அங்கு புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களில் உடல்கள் தொடர்பான நீதி விசாரணைகளை முடக்கும் செயற்பாடாகவே நாங்கள் இதனை பார்க்கின்றோம். இதனாலேயே உள்நாட்டு பொறிமுறை அல்லது உள்நாட்டில் உள்ள நபர்களால் செய்யப்படும் ஆய்வுகள் திருப்திகரமான ஆய்வாக இருக்காது என்பதனை கூறுகின்றோம். இதனாலேயே சர்வதேச விசாரணை, சர்வதேச நிபுணர்களை கொண்டு இந்த புதைகுழிகளை தோண்டி மனித எச்சங்களை பார்த்து ஆராயும் போது உண்மைகளை கொண்டுவர முடியும். இதனால் ராஜ் சோமதேவின் நான்காவது அறிக்கை முன்னுக்கு பின்னான முரணானதாக இருக்கின்றது.

புதைக்கப்பட்ட உடல்கள் தோண்டியெடுக்கப்படும் போது சப்பாத்து அணிந்த சிறுபிள்ளைகள் இருந்துள்ளனர். வயோதிபர்கள், சிறிய குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இருந்துள்ளனர். அவர்களின் சப்பாத்துகள், செருப்புகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அறிக்கையில் அவற்றை காணவில்லை. பாடசாலை பை, அவர்களின் ஆடைகளும் இருந்தன. ஆனால் அறிக்கையை பார்க்கும் போது இது 40, 50 வருடங்களுக்கு முற்பட்ட உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிடுகின்றார். இதனால் இது முன்னுக்கு பின் முரணான கருத்தாக இருக்கின்றது. இதனை ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுகின்ற செயற்பாடாகவே பார்க்கின்றோம்.

இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும். விசேடமாக உள்நாட்டிலுள்ள நிபுணத்துவம் உள்ளவர்கள் மட்டுமன்றி சர்வதேசத்திலுள்ள நிபுணத்துவம் மிக்கவர்களையும் உள்வாங்கி ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும். 65 வீதமான இடங்களிலேயே உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் 35 வீதமான இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 1200க்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சோமவன்ச ராஜபக்‌ஷ என்பவர் 1995, 1996 காலப்பகுதியில் குறித்த பகுதியில் இராணுவ சிப்பாயாக இருந்தவர் என்பதுடன், குறித்த சம்பவத்தை நேரடியாக கண்டவராவார். இவர் சாட்சியமளித்துள்ளார். இப்போது அவரை மீண்டும் சீஐடியினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர். இந்த சிப்பாய் இருந்த போது நடந்த படுகொலையை அடிப்படையாகக் கொண்டு 600க்கும் மேற்பட்ட உடல்கள் அந்த பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இயற்கை அனர்த்தம் அல்லது தொற்று நோயினால் புதைக்கப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற ஊகம் எழும்புவதாக கூறப்பட்டுள்ளது. இது மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயற்பாடாகவே தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஆகவே மிகுதியாக இருக்கும் 35 வீத இடங்களையும், பிரதேசங்களையும் ஆய்வு செய்ய வேண்டுமென்றால் அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்புடன் இதற்கான வேலைத்திட்டங்களை செய்ய வேண்டும். அரசாங்கத்திற்கு அந்த கடமையும் பொறுப்பும் உள்ளது. பட்டலந்த படுகொலை தொடர்பான விடயங்களில் கடந்த கால அரசாங்கத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஆய்வு செய்யும் அதேநேரத்தில் செம்மணி தொடர்பான மிகுதி விடயங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது.

கடந்த கால மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கமாக இருக்கலாம் அல்லது சந்திரிகா, பிரேமதாச கால அரசாங்கங்களாக இருக்கலாம். இவர்களாலேயே இந்த படுகொலைகள் செய்யப்பட்டன. இதனால் இந்த விடயங்களின் அடிப்படையில் இந்த அரசாங்கத்திற்கு பொறுப்புகள் உள்ளன. தமிழின படுகொலையை மறைப்பதற்கான ஒரு விடயமாக இது இருக்கலாம் என்ற சந்தேகங்கள் உள்ளன.

இந்த ராஜ் சோமதேவ வழங்கியுள்ள அறிக்கை கேள்விக்குரிய அறிக்கையாகவே இருக்கின்றது. முதலாம், இரண்டாம், மூன்றாவது அறிக்கைகளில் மனித புதைகுழி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நான்காவது அறிக்கையில் மனித புதைகுழி என்ற விடயத்தை சுட்டிக்காட்டவில்லை.ஆகவே இந்த அறிக்கை திட்டமிடப்பட்ட செயலாகவும், சர்வதேசத்தை ஏமாற்றுகின்ற செயலாகவும் இருக்கும். எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தகுந்த நீதியான விசாரணையை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )