
ராஜபக்ஷக்களுடன் இருப்போம்,வெகுவிரைவில் ராஜபக்ஷக்களுடன் மீண்டெழுவோம்; மஹிந்த மீது நாட்டு மக்களுக்கு இன்றும் நன்மதிப்பு உள்ளது
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகுவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது,காலி முகத்திடல் போராட்டத்தில் ‘கோ ஹோம் கோத்தா ‘என குறிப்பிடப்படுகிறதே தவிர மஹிந்தவை வீட்டுக்குச் செல்லுமாறு குறிப்பிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டோம். மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்களுக்கு இன்றும் நன்மதிப்பு உள்ளது.நாம் என்றும் ராஜபக்ஷக்களுடன் இருப்போம் வெகுவிரைவில் ராஜபக்ஷக்களுடன் மீண்டெழுவோம்என முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுன எம்.பி.யுமான ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ,ஜனாதிபதியின் சிம்மாசன உரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நாட்டு மக்களுக்கு இன்றும் நன்மதிப்பு உள்ளது.மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகுவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாது,காலி முகத்திடல் போராட்டத்தில் ‘கோ ஹோம் கோத்தா ‘என குறிப்பிடப்படுகிறதே தவிர மஹிந்தவை வீட்டுக்குச் செல்லுமாறு குறிப்பிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டோம்.
மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு பல்வேறு தரப்பினருக்கு அழைப்பு விடுத்தார்.இருப்பினும் எவரும் அழைப்பை ஏற்று சவால்களை பொறுப்பேற்கவில்லை.விருப்பம் ஆனால் பயம் என்பதால் எவரும் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.
இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக ரணில் விக்கிரமசிங்க பிரமராகுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.மக்கள் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக அரசியல் நஷ்டத்தை எதிர் கொண்டோம்.
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று குறிப்பிட்ட காரணத்தினால் பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதிக்கு முழுமையாக ஆதரவு வழங்கியது.
ஜனநாயக போராட்டம் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை போராட்டத்தின் உண்மைத் தன்மை தற்போது வெளிப்பட்டு வருகிறது.வன்முறைகளினால் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலில் ஈடு பட அவதானம் செலுத்த வேண்டும்.
போராட்டத்தின் உண்மை நோக்கம்,நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் தற்போது வெளிப்படுகிறது.குறுகிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரணில்- ராஜபக்ஷ அரசாங்கம் என குறிப்பிடப்படுகிறது.நாம் என்றும் ராஜபக்ஷக்களுடன் இருப்போம் வெகுவிரைவில் ராஜபக்ஷக்களுடன் மீண்டெழுவோம் என்றார்.

