அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவுதி மன்னரிடம் முஸ்லிம் எம்.பி.க்கள் கோரிக்கை

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவுதி மன்னரிடம் முஸ்லிம் எம்.பி.க்கள் கோரிக்கை

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு கோரி, இலங்கையின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவூத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ள இந்தக் கடிதத்தில், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி உள்ளிட்டோர் அனோஜனுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அவரது தண்டனையை குறைக்க அல்லது அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தள்ளுபடி செய்யுமாறும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

அனோஜன் குறைந்த வருமானம் பெறும் தொழிலாளி எனவும், இலங்கையில் உள்ள அவரது குடும்பம் அவரது வருமானத்தையே பெரிதும் நம்பியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை அவரது பொருளாதார நிலைக்கு மிகவும் அதிகமானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாம் தண்டனைக்குள்ளான சம்பவம் தொடர்பில் அனோஜன் வருத்தத்தையும் மனவேதனையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, சவுதி அரேபியாவின் சட்ட அதிகாரம், இறையாண்மை மற்றும் நீதித்துறை நிறுவனங்களுக்கு தாங்கள் முழுமையான மதிப்பளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகள் மற்றும் நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கோரிக்கை முழுமையான மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )