
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் யுத்த கால அளவுக்கு படை முகாம்கள் தேவையில்லை
வடக்கு, கிழக்கில் யுத்த காலத்தில் இருந்த அளவுக்கே இராணுவ முகாம்களை நடத்திச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளன என்றும், இதன்படி அந்த முகாம்கள் இருந்த இடங்களை நாட்டுக்கு பொருளாதாரத்தை ஈட்டக்கூடிய இடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ் பேசும் கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது முன்வைத்த விடயங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று நடந்த கலந்துரையாடலின் தகவல்கள் எனக்கு தெரியாது. ஆனால் தேசிய பாதுகாப்பு திட்டமிடலுக்கமைய சில முகாம்கள் மறுசீரமைக்கப்படும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. யுத்த காலத்தில் இருந்த முகாம்கள் தற்போதைய நிலைமையில் அதே அளவில் இருக்க வேண்டியது அவசியமில்லை என்று தீர்மானிக்கப்படுகின்றது. இது பாதுகாப்பு சபைகளில் எடுக்கப்படும் தீர்மானங்களாகும். அந்த இடங்களை பொருளாதார ரீதியில் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் வகையில் முதலீடுகளுக்காக பயன்படுத்தும் இடங்களாக அமையவுள்ளன என்றார்.

