
துயரத்தின் சாட்சியாய் முள்ளிவாய்க்கால்: ஆறாத வடு, மாறாத நினைவு,நெஞ்சை விட்டகலா பெரும் சோகம்; கண்ணீரில் கரைந்த தமிழர் தேசம்
2009 ஆம் ஆண்டு நடந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான் தமிழ் மக்களின் துயர வரலாற்றை சுமந்து தமிழினப் படுகொலையின் சாட்சியாக விளங்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் 17 ஆவது ஆண்டாக நேற்று திங்கட்கிழமை ஒன்று திரண்ட தமிழர் தேசத்தினால் முள்ளிவாய்க்கால் மண் கண்ணீரில் கரைந்தது,
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவு நாளான ‘மே 18’ நேற்று திங்கட்கிழமை தமிழர்தாயகப்பகுதியான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் புலம்பெயர் தமிழர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் முள்ளிவாய்க்காலில் அமைக்கப் பட்ட நினைவு முற்றத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதி களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முள்ளிவாய்க்கால் நோக்கி அணி திரண்டனர். காலை 10.15 மணிக்கு தவத்திரு அகத்தியர் அடிகளாரால் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு பிரகடன உரை ஆரம்பமாகியது .அதனைத்தொடர்ந்து அஞ்சலி நிகழ்வில் காலை 10.29 க்கு நினைவொளி சத்தம் எழுப்பப்பட்டு 10.30 க்கு அகவணக்கம் இடம்பெற்றது
அதனை தொடர்ந்து இறுதி யுத்தத்தில் 4 அங்கத்தவர்களை இழந்த வற்றாப்பளையை சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசாவால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. உயிர்நீத்தவர்க ளின் உறவுகள் கதறியழ, கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம் நனைந்தது.
கண்ணீரில் மூழ்கிய முள்ளிவாய்க்கால் துயர வரலாற்றை சுமந்த சாட்சியாக விளங்கும் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உறவுகளை நினைத்து கண்ணீர் விட்டு கதறியழுதனர். நாட்டின் நாலாபுறமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முள்ளிவாய்க்காலில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் முள்ளிவாய்க்கால் நனைந்தது. தமது உறவுகளை நினைத்து வைத்த ஒப்பாரிகளும் அழுகுரல்களும் அப்பகுதியை சோகத்தில் மூழ்கடித்தது.
தமது உறவுகளின் படங்களுடன் வந்த பலரும் அங்கு படங்களை வைத்து மாலைகள் அணிவித்து விளக்கேற்றி படையல் படைத்து அழுதுபுலம்பியது பார்ப்போர் கண்களிலும் கண்ணீரை வரவைத்தது. தமது கொல்லப்பட்ட உறவுகளை நினைத்து கதறியழுத போது நாட்டின் முன்னைய ஆட் சியாளர்களை திட்டித்தீர்த்ததையும் சாபங்கள் இட்டதையும் காண முடிந்தது.
பிதிர்க் கடன்
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் கப்பல் துறை கடற்கரையில் இறந்தவர்களுக்காக தென்புலத்தார் வழிபாடு இடபெற்றது. காலை ஆறு மணி முதல் 09 மணி வரை, முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் நடத்தப்பட்டன .இதன்போது உயிரிழந்தவர்களுக்கு , தர்ப்பணம் முதலானவை மக்களிடமிருந்து பொருட்செலவோ பணமோ பெறாமல் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட எம். பி.துரைராசா ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினை வேந்தலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்ட து.முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து வெளியேறும் வழி முல்லைத்தீவு – புதுக் குடியிருப்பு விதியில் சந்தித்துக் கொள்ளும் போது இந்த வாகன நெரிசல் ஏற்பட்டது. இருவழி பாதையான இந்த வீதி ஏ வீதியில் மக்கள் நடந்து செல்வதிலும் கூட சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி மோட்டார்சைக்கிள்கள், வாகனங்களில் பேரணியாக சென்றனர்
இதேவேளை முள்ளிவாய்க்காலுக்கு செல்லும் வீதியில் முல்லைத்தீவு மாவட்ட வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரம், விசுவமடு பிரதேசம் ஆகியவற்றில் முழுமையாக கடைகள் மூடப்பட்டிருந்த அதேவேளை வீதி நெடுகிலும் கூடாரங்கள் அமைக்கப் பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப் பட்டது.
கிளிநொச்சியிலும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி நகரில் உள்ள அனைத்து வர்த்தக செயற்பாடுகளும் நிறுத்தப்பட்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. குறித்த நிகழ்வுகள், முடிகண்டி பிள்ளையார் ஆலயம் முன்பாக இடம்பெற்றன.
இந்த முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும், மதத் தலைவர்களும், பெருந்திரளான பெதுமக்களும் பங்கேற்று தமது அஞ்சலிகளைச் செலுத்தினர் .
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினம் மன்னாரிலும் தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் தலைமையில் காலை மன்னார் நகர பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலைக்கு முன்பாக இடம்பெற்றது.இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.குறித்த நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார்,மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா,அரசியல் பிரதிநிதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கில்…
கிழக்கு மகாகணத்திலும் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது. அத்துடன் கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில், மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுக் காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதினை தொடர்ந்து முள்ளிவாய்க்காலினை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டதுடன், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.இதன்போது நிகழ்வில் மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ஆதம்குணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.அதேபோன்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் குருமன்வெளி வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.
இதேவேளை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியினர் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றிலில் நடைபெற்றது.இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், திருகோணமலை மாநகர சபை மேயர் க.செல்வராசா(சுப்ரா) உட்பட கட்சியின் முக்கிதஸ்தர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். திருகோணமலை மாவட்டத்திலும் பல்வேறு பகுதியில் முள்ளிவாய்க் கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட் டது. குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வை அப்பகுதி இளைஞர்கள் பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
கொழும்பில்…
கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால்நேற்றுக் காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.அத்துடன் கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) மாலை 5 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது இதில் தமிழமக்களுடன் சிங்கள மக்களும் சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டன.

