உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஜிபூர் ரஹ்மான் பிரதான சூத்திரதாரியா என சந்தேகம்; தொடர்பு உண்டென்கிறார் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஜிபூர் ரஹ்மான் பிரதான சூத்திரதாரியா என சந்தேகம்; தொடர்பு உண்டென்கிறார் சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியா அல்லது முஜிபூர் ரஹ்மானா என்ற சந்தேகங்கள் எழுவதாகவும் முஜிபூர் ரஹ்மானின் செயற்பாடுகளை பார்க்கும் போது இவரும் இந்த தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவரே என்றும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சரத் வீரசேகரவினால் தனது அலவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது சரத் வீரசேகர மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் சில தினங்களுக்கு முன்னர் உதய கம்மன்பில வெளியிட்ட புத்தகம் தொடர்பில் கருத்து கூறும்போது கோதாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக சலே போன்றோரே சஹரானை வழிநடத்தியதாக கூறியுள்ளார். இதற்காகவே சலேவை அந்தப் பதவியில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாகவும் கூறியுள்ளார். எவ்வாறாயினும் முஜிபூர் ரஹ்மானுக்கு இனியும் மக்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம்.

கம்மன்பிலவின் குறித்த புத்தகமானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விசாரணை அறிக்கைகளில் காணப்படும் ஆயிரக் கணக்கான பக்கங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது. தாக்குதலை வழிநடத்தியது, தாக்குதலுக்கு பயிற்றுவித்தது அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தது அனைத்தும் சஹரான் என்பதனாலேயே அந்தப் புத்தகத்தில் அதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் நௌபர் மௌலவியே அந்த கொள்கைக்கு தள்ளியுள்ளார்.

இந்நிலையில் கோதாபய ராஜபக்‌ஷவை ஆட்சிக்கு கொண்டு வரும் அரசியல் சூழ்ச்சி இதற்குள் உள்ளதாக முஜிபூர் ரஹுமான் கூறுகின்றார். ஆனால் இந்த விடயத்தில் ஐஎஸ் அமைப்பின் பெயரை குறிப்பிடவில்லை. சஹரான் மற்றும் நௌபர் மவுலான ஆகிய இருவரும் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்களாவர். இஸ்லாம் அரசை அமைப்பதே அந்த இயக்கத்தின் நோக்கமாகும். விசாரணைகளில் அவர்கள் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் முஜிபூர் ரஹ்மான் அதனை கூறாமல் அரசியல் சூழ்ச்சி என்று கூறுகின்றார். இதனால் ஐஎஸ் அமைப்பின் ஒப்பந்தத்தை அவர் செய்கின்றாரா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. அதன்படிதான் சலேவை கைது செய்கின்றார்களா? என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளத.

2016ஆம் ஆண்டில் இலங்கையில் இருந்து நான்கு குடும்பங்கள் அடங்களாக 37 பேர் சிரியாவுக்கு ஐஎஸ் பயிற்சிக்காக சென்றுள்ளதாக அப்போதிருந்த அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ கூறிய போது, அதனை முஜிபூர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினரே இதனை நிராகரித்து, இது இனவாத கருத்துக்கள் என்று அது தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர். இவ்வாறான நிலைமையிலேயே 2019இல் தாக்குதல் நடந்தது. சரியாக விசாரணை நடந்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்திருக்கலாம். இதனால் குறித்த விசாரணைகளை நடத்தவிடாமல் இடையூறுகளை ஏற்படுத்திய முஜிபூர் ரஹ்மானே இதற்கு நேரடியாக பொறுப்புக் கூற வேண்டும். இந்நிலையில் அவர் மக்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம்.

சஹரானின் தம்பி குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் குண்டு தயாரிக்கும் போது அதில் காயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு சென்றவர்கள் யார் என்பதனை முஜிபூர் ரஹ்மான் அறிவார். மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய விடாமல் தடுத்தவர்கள் யார் என்பதனை அவர் அறிவார். வனாத்துவில்லு வெடிபொருட்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு அழுத்தம் கொடுத்தவர்கள் யார் என்பதனையும் அறிவார். அத்துடன் தமது அரசாங்க காலத்தில் தௌபீக் பள்ளிகளை அமைக்க அனுமதி வழங்கியது யார் என்பதனையும் அறிவார். இவை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவையே. தாக்குதலுக்கு முன்னர் 2018 மே 19ஆம் திகதி சஹரானுக்கு எதிராக புலனாய்வு பிரிவு விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு அவரை கைது செய்ய முயற்சித்த போது அதனை தடுத்தவர்கள் யார்? இவை தொடர்பில் முஜிபூர் ரஹ்மான் பொறுப்புக் கூற வேண்டும். தாக்குதலுக்கு முன்னர் 8 சம்பவங்கள் நடந்துள்ளன. அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எதுவும் முஜிபூர் ரஹ்மான் மற்றும் அவரின் அரசாங்கத்தினால் எடுக்கவில்லை. இதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முஜிபூர் ரஹ்மானும் அந்த அரசாங்கமுமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இதேவேளை 1999ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளருக்கு முஸ்லிம் விடுதலை முன்னணி ஆதரவளித்தது. குறித்த கட்சியின் தலைவர் முஜிபூர் ரஹ்மான் ஆகும். காத்தான்குடியை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. சஹரானி தேசிய தௌபீக் ஜமாத்தும் அங்கேயே ஆரம்பித்தது. இதனால் இவர்களுக்கிடையே தொடர்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவ்வளவு காலம் நான் தவாறான நிலைப்பாட்டில் இருந்ததாக நினைக்கின்றேன். அதாவது நௌபர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென்றும் அவரே சஹரானை அந்த கொள்கைக்குள் தள்ளியதாக கூறினேன். ஆனால் 2016ஆம் ஆண்டில் இருந்து முஜிபூர் ரஹ்மானே ஐஎஸ் கொள்கையை இலங்கைக்குள் அறிமுகமாகும் போது அதனை தடுப்பதற்கு புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட போது, அந்த செயற்பாட்டை முஜிபூர் ரஹ்மானே தடுத்துள்ளார். அத்துடன் தாக்குதலின் பின்னர் ஐஎஸ் அமைப்பு மீதான அவதானத்தை திசை திருப்ப செயற்படுவது முஜிபூர் ரஹ்மானே அகும். இதனால் இதன் பின்னால் இருக்கும் பிரதான சூத்திரதாரி மற்றும் இந்த தாக்குதலானது முஜிபூர் ரஹ்மானுக்கு தெரிந்து நடந்ததா? என்ற சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இதனால் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியா அல்லது முஜிபூர் ரஹ்மானா என்ற சந்தேகங்கள் எனக்கு ஏற்பட்டுள்ளன என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )