
முஜிபூர் ரஹ்மான் எம்.பி.க்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு; உதய கம்மன்பில தெரிவிப்பு
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருக்கின்றது என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஜிபூர் ரஹ்மான் எனது புத்தகத்தை வாசிக்காமலே அது தொடர்பில் கருத்துக்களை கூறுகின்றார். எனது புத்தகத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தவறு என்றால் ஊடக சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்காமல் என்னுடன் விவாதத்திற்கு வருமாறு நான அழைப்பு விடுக்கின்றேன். அத்துடன் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கும் இது தொடர்பில் விவாதத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சஹ்ரானே நடத்தினார் என்று கூறுவது புதுமையான விடயமல்ல. ஆனால் எனது புத்தகத்தில் என்ன உள்ளது என்பதனை சரியாக வாசித்தால்,நான் என்ன கூற வருகின்றேன் என்பதனை புரிந்துகொள்ள முடியும். நான் பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலேயின் சட்டத்தரணி என்பதனால் எனது புத்தகத்தில் உள்ள விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முஜிபூர் ரஹ்மான் கூறியுள்ளார். புத்தகத்தை சரியாக வாசிக்காமல் அவர் இவ்வாறு கூறுகின்றார்.
இதுவரையில் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என்றுதான் கருதப்பட்டது. ஆனால் 2019 மார்ச் 19ஆம் திகதி நௌபர் மௌலவியும் சஹரானும் ஐஎஸ் சிறீலங்கா அமைப்பில் இருந்து இரண்டு பிரிவுகளாக பிளவடைகின்றன. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்துவதற்கு 2019 மார்ச் 29ஆம் திகதியே நடக்கின்றது. இதனால் நௌபர் மௌலவிக்கு அந்த தாக்குதல் திட்டங்களுடன் தொடர்பில்லை என்று தெரியவருகின்றது. இந்நிலையில் எவ்வாறு தாக்குதலுக்கு திட்டமிடல்கள் நடத்தப்பட்டன என்பது தொடர்பில் எனது புத்தகத்தில் உள்ளது.
அரசாங்கத்தை கஸ்டப்படுத்தும் வெளிப்படுத்தல்களை நான் வெளியிடும் போது அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் குழப்பமடைவதில் அர்த்தம் உள்ளது. ஆனால் ஏன் முஜிபூர் ரஹ்மான் குழப்பமடைய வேண்டும். முஜிபூர் ரஹ்மான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்தாலும் 1999 தேர்தலில் ஜே.வி.பிக்கே அவர் ஆதரவளித்தார். அத்துடன் 2019இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது பயங்கரவாத விசாரணை பிரிவினால் இந்தியாவில் பிடிக்கப்பட்ட ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்த ஒருவருடன் முஜிபூர் ரஹ்மான் தொடர்புகளை பேணியதாக தகவல்கள் வெளியாகின. இதன்படி இவரிடம் விசாரணை நடத்த வேண்டிய தேவையிருந்த போதும், பொலிஸ் உயர் அதிகாரியொருவர் அதனை தடுத்து நிறுத்தினார். அத்துடன் அகமதாபாத் நகரில் கைது செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்புடன் தொடர்புபட்டிருந்தவர்கள் முஜிபூர் ரஹ்மானுடன் தொடர்புபட்டிருந்ததாக முன்னர் கூறப்பட்டவருடன் தொடர்புபட்டிருந்தவர்களாகும்.
இதேவேளை அமைச்சராக இருந்த விஜேதாச ராஜபக்ஷ ஐஎஸ் இயக்கத்துடன் இணைந்தவர்கள் தொடர்பான தகவல்களை கூறும் போது அதனை இனவாத கருத்தாக கூறி அவற்றை தடுத்து நிறுத்த முஜிபூர் ரஹ்மான் நடவடிக்கையெடுத்திருந்தார்.
இந்நிலையில் இப்போது ஏன் எனது புத்தகத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டும். 2016ஆம் ஆண்டில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் விசாரணைகளை நிறுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வழியேற்படுத்தியது முஜிபூர் ரஹ்மானே ஆகும். உங்களின் கைகளில் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இரத்தமே படிந்துள்ளது. இப்போதாவது உங்களின் அடிப்படைவாதத்தை நிறுத்தி அந்த கைகளை கழுவ நேரம் வந்துள்ளது என்பதனை முஜிபூர் ரஹ்மானுக்கு கூறிக்கொள்கின்றோம். இன்னும் தொடர்ந்தும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அடிப்படைவாதத்திற்குள் தள்ள வேண்டாம் என்று கூறிக்கொள்கின்றோம் என்றார்.

