யாழில் அதிகாலையில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: 17 வயது சிறுவன் பலி

யாழில் அதிகாலையில் காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: 17 வயது சிறுவன் பலி

யாழில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகிச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் ஊர்காவற்றுறை காவல் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வேலணை – அல்லைப்பிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் வாகனம் ஒன்று இன்று அதிகாலை சென்றுள்ளது.

குறித்த வாகனத்தை அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வழிமறித்துச் சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

இருப்பினும், காவல்துறையினரின் உத்தரவை மீறி குறித்த வாகனம் அதிவேகமாகச் சென்றுள்ளது.

குறித்த வாகனம், காவல்துறையினரை மோதித் தள்ளிவிட்டுத் தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக சென்றதை அவதானித்த காவல்துறையினர், வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது ஒரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில், அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர்.

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )