
வல்வெட்டித்துறையில் கப்டன் பண்டிதரின் 41 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன். பண்டிதர் என அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் 41 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) பிற்பகல் யாழ் வல்வெட்டித்துறையிலுள்ள அவரது இல்லத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பண்டிதரின் உருவப் படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு, ஈகச் சுடர் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கப்டன் பண்டிதரின் தாயார், குடும்பத்தினர், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ்மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை, 1985 ஆம் ஆண்டு ஐனவரி 9 ஆம் திகதியன்று யாழ்.அச்சுவேலியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தளமொன்றைப் பெருந்தொகையான படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதன்போது அங்கிருந்த விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. நீண்டநேரமாக நடந்த சண்டையில் கப்டன் பண்டிதர் உள்ளிட்ட நான்கு விடுதலைப் புலி உறுப்பினர்கள் வீரச் சாவு அடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

