இலங்கை வரும் ஜெய்சங்கர் தமிழரசு – சங்கு கூட்டணியுடன் சந்திப்பு

இலங்கை வரும் ஜெய்சங்கர் தமிழரசு – சங்கு கூட்டணியுடன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எதிர்வரும் 23ஆம் திகதி ஒரு நாள் விஜயமாக கொழும்புக்கு வருகை தருகின்றார்

இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசும் அவர் கொழும்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்குக் கூட்டணி) ஆகிய தரப்பினரை ஒன்றாகச் சந்திக்கவிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.

பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உடனடி அயல்நாடு என்ற முறையில் பெருமளவில் விரைந்தும் தொடர்ந்தும் இந்தியா உதவி வரும் பின்னணியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஒரு நாள் விஜயமாகக் கொழும்பு வருகின்றார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வந்திருந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நான்கு தலைவர்களையும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இரண்டு தலைவர்களையும் சேர்த்து ஒன்றாகச் சந்தித்திருந்தார்.

அந்தச் சந்திப்பின் தொடர்ச்சி இப்போது இந்திய வெளிவிவகார அமைச்சரின் கொழும்பு விஜயத்தின் போதும் தொடர்ந்து இடம்பெறும் எனத் தெரிகின்றது.

பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழரசுக் கட்சி பிரமுகர்களான கட்சியின் தலைவர் சிவஞானம் பொதுச்செயலாளர் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் செவ்வாயன்று இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்திப்பர் என்று தெரிகின்றது.

சங்கு கூட்டணியின் சார்பில் இரண்டு தலைவர்கள் முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பங்குபற்றியிருந்தனர். இந்த முறையும் அவர்கள் சார்பில் இருவர் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றுவர் என்று தெரிகின்றது.

ஏற்கனவே இதே 23ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் சங்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐந்து கட்சிகளின் தலைவர்களுமாகச் சேர்ந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆயினும் இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகையையொட்டி அந்தச் சந்திப்பு தள்ளிப் போய் இருப்பதாகத் தெரியவருகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஒரு நாள் கொழும்பு விஜய விவரங்கள் நாளை அளவில் உறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இந்த விஜயத்தின்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனத் தெரியவந்தது.

இலங்கையில் ஆட்சி அமைத்திருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசின் பிரதான பங்காளிகளான ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் மாத இறுதியில் புதுடில்லி செல்கின்றார் என்று கூறப்படும் பின்னணியில் அதற்கு முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வருகை தந்து இலங்கைத் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )