
இலங்கை அரசமைப்பில் சமஷ்டிக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்; திருமாவளவன் கூறுகிறார்
தனித்தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கு நடத்தப்பட வேண்டுமென்பது நீண்ட நெடிய காலத்தில் நடைபெறக் கூடிய ஒன்று. அதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அந்த இடைப்பட்ட காலத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தமிழர்களுக்கான வடகிழக்கு மாகாணங்களில் மாகாண சபைக்கான முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திலே கூட்டாட்சி முறைமையை கொண்டுவர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான தமிழ் தேசிய பேரவையின் சந்திப்புக்கு பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசு புதிய அரசமைப்புச் சட்டத்தை விரைவில் எழுதவிருக்கிறது. ஏற்கனவே உள்ள சட்டத்தை மாற்றி புதிய அரசமைப்புச் சட்டத்தை எழுத அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள சூழலில் இந்திய அரசு தலையீடு செய்து அந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி முறையை வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு அதில் தலையிட வேண்டுமானால் தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த குழு முதலமைச்சரை சந்தித்து அது குறித்து பேசி இருக்கிறார்கள். புதிதாக உருவாக இருக்கிற அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே இருக்கிற ஒற்றை ஆட்சி முறைமை இருக்கக் கூடாது. மாகாணங்களுக்கான அதிகாரங்களை தமிழ்நாட்டிலே மாநில சுயாட்சி என்பதைப்போல மாகாணங்களுக்கிடையில் என சுயாட்சி அதிகாரத்தை வழங்கக் கூடிய கூட்டாட்சி முறைமை என்பது அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்பதுதான் முதன்மையான கோரிக்கை.
இந்திய- இலங்கைய ஒப்பந்தப்படி அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தினாலே இந்த கூட்டாட்சி முறைமை கொண்டுவர முடியும் என இந்தக் குழு நம்புகிறது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் எங்களுக்கு எந்த முரணும் இல்லை ,ஆனால் அவர்கள் உருவாக்கிய 13ஆம் திருத்தம் எங்களுக்கான அதிகாரத்தை வழங்கவில்லை. தனி ஈழம் தான் தீர்வு என்பது இறுதி இலக்கு. அது ஒரு கனவு கோரிக்கை. இறுதி இலட்சியம். ஆனால் அது நடைபெறுகிற வகையில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற அரசமைப்புச் சட்டத்தில் நமக்கான அதிகார பகிர்வு என்பது வலியுறுத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழ் தேசிய பேரவையின் கோரிக்கை.
தனித்தமிழ் ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்பது நீண்ட காலத்தில் நடைபெறக் கூடிய ஒன்று. அதில் மாறுபட்ட கருத்து இல்லை, ஆனால் அதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தமிழர்களுக்கான வடகிழக்கு மாகாணங்களில் மாகாண சபைக்கான முழுமையான அதிகாரத்தை வழங்க வேண்டும். அதற்கு ஏற்ப இலங்கை அரசமைப்புச் சட்டத்திலே கூட்டாட்சி முறையை கொண்டுவர வேண்டும்.
இலங்கையிலுள்ளவர்கள் கோரிக்கை வைத்தாலும் அதில் இந்திய அரசுக்கு பொறுப்பு இருக்கிறது. இந்திய அரசு தலையிட முடியும். ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசு தலையீடு செய்து இன்றைய இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
நேரடியாக இந்திய மத்திய அரசை அணுகுகின்ற முறை ஒருபுறம் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் தமிழக அரசு இதிலே இந்திய ஒன்றிய அரசுக்குரிய அழுத்தத்தை கொடுக்கின்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இலங்கையில் ஈழத்து மீனவர்களுக்கும் முரண்பாடு மோதலை உருவாக்குவது, தமிழ்நாட்டின் மீனவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஏவுவது, துப்பாக்கி சூடு நடத்துவது, அவர்களின் படகு உள்ளிட்ட வாழ்வாதார விடயங்களை கைப்பற்றுவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள். நமக்கு இடையே நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் இரண்டு மீனவர்களுக்கும் இடையில் ஒரு பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள்.
இந்த இரண்டு முக்கியமான கோரிக்கையையும் கட்டாயமாக பரிசீலிப்போம். தங்களாலான வகையிலேயே இந்திய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தருவோம் என்ற கருத்தை முதல்வர் பகிர்ந்து கொண்டார்.இந்த சந்திப்பு இனிதே அமைந்தது – என்றார்.

