
காலிமுகத்திடலில் விடுதலைப் புலிகள்; போராட்டக்காரர்களை கைது செய்யுங்கள்; ஐக்கிய போர்வீரர் சமூகம் வலியுறுத்தல்
காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்களும் இருப்பதாக குற்றம்சாட்டிய ஐக்கிய போர்வீரர் சமூகத்தின் அழைப்பாளர் அசேல தர்மசிறி ,பிரபாகரனுடன் இணைந்து போராடிய பலர் இந்த போராட்ட களத்தில் இருப்பதால் போராட்டக்காரர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்
போரினால் பெற்றுக் கொள்ள முடியாததை நாட்டை சீர்குலைத்து பெற்றுக்கொள்ள புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.30 ஆண்டு கால யுத்தத்தின் தியாகிகளை நினைவு கூரும் தினத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக ஒரு தந்தையும் தமிழ் இளைஞர்கள் குழுவும் காலி முகத்திடலில் நிகழ்வை நடத்தின அன்றைய தினம் பிரபாகரனுடன் இணைந்து போராடிய பலர் போராட்ட களத்தில் காணப்பட்டனர் அது தொடர்பான புகைப்படங்கள் கூட உள்ளன. புலம்பெயர் புலிகள் போராட்டத்தில் முன்னணியில் உள்ளதாக அதன் உறுப்பினர் ஒருவர் அண்மையில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
எமது வேலைத்திட்டத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாடு விட்டு நாடு தாவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழ் மக்கள் கூறிவருகின்ற நிலையில் பிக்குகள் இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை கவலைக்குரியது போராட்டம் என்ற போர்வையில் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் அனைத்து போராட்டக்காரர்களையும் கைது செய்ய வேண்டும். ஜனாதிபதி செயலகத்திற்குள் ஊடுருவி கஞ்சா மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்றார்.

