
நடுக்கடலில் பயத்தில் அழுது புலம்பிய செவ்வந்தி; பயங்கரமான அனுபவத்தை வெளிப்படுத்திய இஷாரா
யாழ்ப்பாணம் – குருநகர் இறங்குதுறையில் இருந்து சிறிய மீன்பிடி படகில் சென்றபோது இஷாரா செவ்வந்தி பயத்தில் அழுது புலம்பியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்ஜீவ கொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலதிக விசாரணைகளுக்காக அவர் தங்கியிருந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றார். அந்த வகையில் கிளிநொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அம்பாள்குளம் பகுதியில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய குற்றச்சாட்டில் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும், அந்த நேரத்தில் யாரும் வீட்டில் இல்லை என்றும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையிலேயே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மித்தெனியவில் இருந்து தமிழர் பகுதிக்கு சென்ற செவ்வந்தி யாழ்ப்பாணத்தில் இரு நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த சமயத்தில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மேயின் வேண்டுகோளுக்கிணங்க சர்வதேச ஆட்கடத்தலில் ஈடுபடும் கும்பலின் உதவியை நாடியுள்ளார்.
அவர்களே செவ்வந்தியை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த செவ்வந்தியை குருநகர் இறங்குதுறைக்கு அழைத்து சென்று அங்கிருந்த சிறிய மீன்பிடி படகில் ஏற்றியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பயத்தில் அழுது புலம்பிய செவ்வந்தி படகில் பயணிக்கும் போது அழுதுகொண்டே சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம் என்றும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
பயணத்தின் போது, படகு கவிழ்ந்து, தான் மூழ்கிவிடுவேனோ என்ற பயத்தில் அலறினேன். படகு கவிழ்ந்து தான் மூழ்கிவிட்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

