செம்மணி மனிதப்புதைகுழி: அடுத்த வழக்கு விசாரணை வரை குற்ற விசாரணைப்பிரிவினர் நாளாந்தம் கண்காணிப்பர்

செம்மணி மனிதப்புதைகுழி: அடுத்த வழக்கு விசாரணை வரை குற்ற விசாரணைப்பிரிவினர் நாளாந்தம் கண்காணிப்பர்

செம்மணி மனிதப்புதைகுழி வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அம்மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனவும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவர் எனவும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.

செம்மணி மனிதப்புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் சட்ட வைத்திய அதிகாரி, சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் திங்கட்கிழமை (13) குறித்த பகுதிக்குக் களவிஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது செம்மணி மனிதப்புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற பகுதிகள் உரியவாறு மூடப்பட்டு, பாதுகாக்கப்படாததால் தற்போது பெய்துவரும் மழையினால் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி இருந்தமை அவதானிக்கப்பட்டது.

செம்மணி சதுத்து நிலத்தையும், களிமண் தரையையும் கொண்ட பகுதியாக இருப்பதனால் தொடர்ச்சியாக மழை பெய்தல், அப்பகுதி முழுவதும் வெள்ளநீரில் மூழ்கிவிடும். ஆகையினால் இன்னும் ஒருசில மாதங்களுக்கு அப்பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பது சாத்தியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை மனிதப்புதைகுழி அமைந்துள்ள பகுதியை குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் நாளாந்தம் கண்காணிப்பதுடன் அரச மருத்துவ அதிகாரி வாரம் ஒருமுறை களவிஜயம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராக்கள் மூலம் சித்துபாத்தி இந்து மயான நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொள்வர் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று அடுத்தகட்ட அகழ்வுப்பணிகளுக்காக 19,106,000 ரூபா நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு நீதியமைச்சு ஒப்புதல் அளித்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், தற்போதைய காலநிலை மற்றும் ஏனைய மனிதப்புதைகுழி வழக்குகள் உள்ளிட்ட தொடர் பணிகள் போன்றவற்றின் காரணமாக விசாரணை அதிகாரிகள் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைக் கட்டம் கட்டமாகப் பிரித்திருப்பதாக விளக்கமளித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )