
அரசு ஒதுக்கும் பரபரப்பு வாரம்!; இது பிரதான சூத்திரதாரி வாரம்
அரசு ஒவ்வொரு வாரத்தையும் ஒவ்வொரு பரபரப்புக்கு ஒதுக்குகின்றது .இது உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி வாரம். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்ற குழுவில் உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி பற்றி குறிப்பிட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட எம்.பி. ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமைஇடம் பெற்ற சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த . அரசாங்கம் ஒருவருடத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.பதவிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாக உறுதியளித்தார்கள்.ஆனால் எதிர்வரும் வாரம் மின்கட்டணத்தை 6 சதவீதத்தால் அதிகரிக்க உத்தேசித்துள்ளார்கள்.
மக்களின் அரசியல் சிந்தனையை திசைத்திருப்பும் வகையில் அரசாங்கம் புதிய விடயங்களை சமூகமயப்படுத்துகிறது. மதுபான வாரம், பட்டலந்த வாரம்,ஐஸ் வாரம், கஜ்ஜா வாரம் என்று ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விடயங்கள் குறிப்பிடப்பட்டன. ஆனால் எந்த விடயமும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை.அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த வாரம் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி வாரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பற்றி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பாராளுமன்ற குழுவில் குறிப்பிட்டதாக வெளியாகியுள்ள செய்தியின் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.குண்டுத் தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது .ஆகவே இந்த வாக்குறுதியையும் ஏனைய வாக்குறுதிகளை போன்று பொய்யாக்க கூடாது என்றார்.