
எங்களுடைய மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வரமுடியாது!
“எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வரமுடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “2009 இறுதி யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்பு 16 ஆண்டுகளாக நீதிக்காக தமிழினம் ஏங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமிழர் தரப்பிலேயே பலரை குழப்பம் செய்யும் விதத்தில் சிலரின் நடவடிக்கை காணப்படுகிறது.
சர்வதேசம் எதையுமே செய்யாது என்ற விசம பிரச்சாரத்தின் மூலம் அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
நான் 15 தடவைக்கு மேல் ஜெனிவா கூட்டத்தொடருக்கு சென்றவன் என்ற அடிப்படையில், நாட்டிலிருந்து கோரிக்கை வரவேண்டும். உள்நாட்டு மக்கள் போதிய அளவு அக்கறை காட்டவில்லை. புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் அழுத்தம் மட்டும் போதாது என்று கருத்துப்பட சொல்லி இருந்தார்கள்.
நடைபெற்றது இனப்படுகொலை என்று சொல்வதற்கு போர் முடிவடைந்து ஏறக்கூடிய ஏழு ஆண்டுகள் எடுத்தன. 2009 இல் போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்தே 3 பிரதான கட்சிகள் இணைந்து இனப்படுகொலை என கையெழுத்திட்டு ஐ.நா.வுக்கு கடிதம் அனுப்பின.
2015 இல் வடக்கு மாகாண சபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றியபோதும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் வடக்கு மாகாண சபை இருந்தபோதும் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருந்தது.
இனப்படுகொலையை நிரூபிக்க முடியாது என சொன்னவர்கள் தற்போது செம்மணிக்கு பிறகு இனப்படுகொலை நிருபிக்கப்படலாம் என்ற கருத்தை எங்கள் தரப்பில் இருந்து சொல்கின்றார்கள்.
நாங்கள் போராடுவதால், அழுத்தம் கொடுப்பதால் எதுவும் ஆகாது என்று இல்லை. எங்களுக்கு அதிஷ்டம் இருப்பது போல செம்மணி மனிதப் புதைகுழி தோண்டும்போது இருநூறுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் இன்று வெளிவந்துள்ளது. இதை குழப்புவதற்கு பலர் செயற்பட்டாலும் நாங்கள் அதனை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
இனிமேல் இனப்படுகொலை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய விதத்தில் ரோம் உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வடக்கு, கிழக்கு பிராந்தியங்களை ஏற்று ஐ.நா.வின் பொறிமுறை ஊடாக எமக்கான பரிகாரநீதி வழங்கப்பட வேண்டும். சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமக்கு தீர்வு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
எங்கள் மக்களின் சம்மதம் இல்லாமல் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது. நாங்கள் எல்லாவற்றையும் செய்வோம் என்ற மமதையை விட்டு முழுமையான தீர்வுக்கு அரசாங்கம் முன்வர வேண்டும். சர்வதேசத்திடம் நீதியை கேட்கவும், தொடர்ந்து போராடவும் தமிழ் மக்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும்” என்றார்.