மாகாண சபை முறைக்கு எதிரானதே இந்த அரசு; எப்படித் தேர்தலை நடத்துவர் – வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்

மாகாண சபை முறைக்கு எதிரானதே இந்த அரசு; எப்படித் தேர்தலை நடத்துவர் – வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள்

தற்போதைய அரசாங்கம் மாகாண சபை முறைமைக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டவர்கள். எனவே அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்துவார்கள் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது எனவும் தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த தேர்தலை விரைவாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

‘வன் டெக்ஸ்ட் இன்னிஷியேற்றிவ்’ என்ற அமைப்பின் ஏற்பாட்டில்  யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் வடமாகாண சபையில் கடந்தகால அனுபவங்கள் மற்றும் மாகாண சபைக்கான தேர்தலை வலியுறுத்தும் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இந்தக்கலந்துரையாடலில் வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.தவராசா, அமைச்சர்களான குருகுலராஜா, கலாநிதி.சர்வேஸ்வரன், உறுப்பினர்களான சபா.குகதாஸ், கேசவன் சயந்தன், கஜதீபன், ஆர்னோல்ட், சுகிர்தன், தவநாதன், கமலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையில் நடைபெற்ற கடந்த காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக ஆராயும் சந்திப்பு ஆக்கபூர்வமானமாக இருந்தது. இதன்போது முக்கிய விடயமாக மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்படுத்தப்படுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. அத்துடன், மாகாண சபையை வினைத்திறனுடன் கொண்டு செல்வதற்கான ஏதுநிலைகளை குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தன.

அந்தவகையில், இலங்கைத் தமிழரசுக்கட்சியாகிய நாங்கள், தமிழ் மக்களுக்கு கிடைத்த இரண்டாவது அரசியல் தளமாகவே மாகாண சபையைக் கருதுகின்றோம். அந்த வகையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.

ரெலோவின் சார்பில் கருத்து வெளியிட்ட சபா குகதாஸ் தெரிவிக்கையில், தற்போதைய ஜே.வி.பி தலைமையிலான அரசாங்கம் மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே பார்க்கின்றது. கடந்த காலங்களில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மாகாணசபை முறைமைக்கு முழுமையாக எதிரானதாகவே இருந்தது. குறிப்பாக கொள்கை ரீதியாக எதிராகவே செயற்பட்டது.

அவ்வாறான நிலையில் தற்போது எல்லை மீள்நிர்ணயத்தினை காரணம் காண்பித்து தேர்தலை தாமதப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். குறிப்பாக தேர்தலை பழைய முறையிலா புதிய முறையிலா நடத்துவது என்ற விவாதத்தையும் கையிலெடுத்து காலத்தை தாழ்த்துவதையே இலக்காகக் கொண்டு வருகின்றார்கள்.

புதிய முறைமையில் தேர்தலை நடத்துவதென்றால் எல்லை நிர்ணய முறைமையில் ஏற்பட்ட குறைபாடுகள் நீக்கப்பட்டால் அல்லது சீர் செய்யப்பட்டால் தான் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே தான் பழைய முறையில் தேர்தலை நடத்த்துவதே இலகுவானது. அதற்கான தனிநபர் பிரேரணை சமர்பிப்பிக்கப்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதியான தவநான் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கோரிக்கையின் முழுமையான வடிவமாக இல்லாது விட்டாலும் மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கான தீர்வின் ஆரம்பமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எமது கட்சி, மாகாண சபை முறைமையை தொடர்ச்சியாக வலியுத்தி வருகின்றவொரு தரப்பாகவே உள்ளது. ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தலை தாமமின்றி நடத்த வேண்டும். அதில் அக்கறை காட்டாது இருக்க முடியாது என்றார்.

புளொட் சார்பில் கலந்து கொண்ட கஜதீபன் தெரிவிக்கையில், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் நீண்டகாலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வை சமஷ்டி முறைமையில் கோரி வருகின்றார்கள். அவர்கள் மாகாண சபை முறைமையை தமக்கான தீர்வாக கருதவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ்த் தேசிய இனத்தின் தீர்வான மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இருப்பினும், முதற்கட்டமாக அரசியலமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு செயற்பாட்டு தளமாக இருப்பது மாகாண சபை முறைமைதான். ஆகவே மாகாண சபைகளுக்கான மக்கள் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.சார்பில் கலந்து கொண்ட முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு மாகாண சபை முறைமையானது, அவர்களது இருப்புடன் தொடர்புடைய விடயமாகும். ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு அவ்விதமான நிலைமைகள் இல்லாது இருக்கலாம்.

அநுர அரசங்கம் தேர்தலை நடத்த விரும்மாவிட்டால் குறைந்த பட்சம் வடக்கு கிழக்கிலாவது தேர்தலை நடத்த வேண்டும்.

இதை அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றோம். சர்வதேச சமூகம் என்று எமது அரசியல் உரிமை குறித்து பேசுகின்றது. இந்திய அரசாங்கமும் மாகாண சபை முறைமையையே ஐ.நாவில் வலியுறுத்துகின்றது.

குறிப்பாக ஐ.நாவின் தற்காலிக வரைபில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இவ்விடயம் தற்போது சர்வதேச தளத்தில் எழுந்துள்ள குரலாகவே இருக்கின்றது. அதனால் மகாணசபை முறைமை நீக்கப்படாது இருப்ப அவசியமாகும். மேலும் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகளின் ஊடாக,மாகாண சபை முறைமை நீக்கப்பட்டால் இந்தியாவுடன் இலங்கை நேரடியாக மோதும் நிலைமையையே உருவாக்கும். அதனால் மாகணசபை முறைமையை நீக்க அரசு முயலாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )