
மகிந்தவுக்கு கொழும்பில் வீடு கிடைக்கவில்லை; தீவிர தேடுதல் தொடர்கிறது
கொழும்பு விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை இல்லத்திற்கு சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு கொழும்பில் தங்குவதற்கு பொருத்தமான வீடு இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ஸ தரப்பு விசேட குழுவொன்றினால் முன்னாள் ஜனாதிபதிக்காக கொழும்பில் வீடொன்று தேடப்பட்டு வருவதாகவும், ஆனால் இதுவரையில் அவர்களால் பொருத்தமான வீடு தெரிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி தங்காலைக்கு சென்றிருந்தாலும் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் மற்றும் முக்கியஸ்தர்களை சந்திப்பதற்காகவும் அவருக்காக கொழும்பில் பாதுகாப்பான இடத்தில் வீடொன்று தேடப்படுகின்றது.
சிலர் அவருக்கு கொழும்பில் வீட்டை கொடுக்க முன்வந்தாலும் ராஜபக்ஸக்கள் எதிர்பார்க்கும் வசதிகளுடன் அந்த வீடுகள் அமையவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் கூடிய விரைவில் பொருத்தமான வீடொன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.