
புதுடில்லியில் இலங்கைத் தூதரகச் சந்திப்பை புறக்கணித்த கஜேந்திரகுமார்,சிறீதரன்
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்திய- இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் சார்பில் புதுடில்லி சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் சந்திப்பும், இராப் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த சந்திப்பையும், இராப் போசனத்தையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் புறக்கணித்துள்ளனர்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானும்,இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான நளிந்த
ஜயதிஸ்ஸ தலைமையிலான இலங்கை பாராளுமன்ற தூதுக் குழுவினர் இலங்கையிலுள்ள இந்திய
உயர்ஸ்தானிகரகத்தின் அழைப்பையேற்று கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்தத் தூதுக் குழுவில் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்றஉறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், (வைத்தியர்) காவிந்த ஹேஷா ஜயவர்தன, தனுர திசாநாயக்க, ருவன்திலக
ஜயக்கொடி, சுனில் பியன்வில, ரியாஸ் பரூக், ஹிருனி விஜேசிங்க, அம்பிகா சாமிவேல், தேவானந்த சுரவீர, சமிந்த ஹெட்டிஆரச்சி, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சுதத் பலகல்ல,பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரி வை.எல்.ரிஷ்மியா, பாராளுமன்ற ஒழுங்குமரபு அதிகாரி ஜீ.ஜீ.சி.எல்.பி.கலன்க, பாராளுமன்ற ஆளும் கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் முகாமைத்துவ உதவியாளர் பிள்யூ.ஆர்.ஏ.கோஷிகா சுஜீவனி ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர்
இந்தத் தூதுக் குழுவினர் ,லோக் சபா மற்றும் ராஜ்ய சபாக்களுக்கான விஜயம்,பாராளுமன்ற நூலக விஜயம் மற்றும் இந்திய ஊடகங்களின் வகிபாகம், பாராளுமன்ற குழு முறைமை,உயர் கல்வி, பொது சுகாதாரம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் நெறிமுறைகள் குறித்தகலந்துரையாடல்கள் என்பனவற்றில் ஈடுபட்டதுடன் சுகாதார சிறப்பு மையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் சங்கங்களின் சம்மேளத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.இவர்கள் இந்திய லோக் சபாவின் சபாநாயகர் ஓம் பிர்லாவுடனும் சந்திப்பை மேற்கொண்டனர் .
இந்த விஜயத்தின் ஒரு ஏற்பாடாக 29 ஆம் திகதி இரவு புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் சந்திப்பும், இராப் போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எனினும், குறித்த சந்திப்பையும், இராப் போசனத்தையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் புறக்கணித்துள்ளனர்.