
செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் ஒரேநாளில் 108 திருமணங்களுக்கு ஏற்பாடு!
எதிர்வரும்-28 ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல்-10 மணி முதல் நண்பகல்- 12 மணி வரை தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் ஒரே நாளில் 108 திருமணங்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான 108 தாலி, கூறைச் சாறி, வேட்டி சால்வை மற்றும் இதர செலவுகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டு சிங்கப்பூரில் வசித்து வருகின்ற துரை சுமதி குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர், இதற்கென யாழ் குடாநாட்டைச் சேர்ந்த 15 பிரதேச செயலகங்கள் ஊடாக வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த இளம் திருமண தம்பதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.
கோவில் வீதி, யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆகவே, சமூக, சமயப் பெரியார்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்துத் தரப்பினர்களும் இத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திருமணத் தம்பதிகளை ஆசீர்வதித்துச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்வதுடன், தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.