ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; அசட் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; அசட் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த சேனல் 4 ஆவணப்படத்தில் பிரதான நபராக இடம்பெற்ற அசட் மௌலானாவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் இந்த முக்கியமான நேரத்தில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகரவிற்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தமை குறித்து அவர் அதிருப்தி வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “அசட் மௌலானாவை இலங்கைக்கு கொண்டு வர நாங்கள் உத்தியோகபூர்வ வழிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த சிறிய குழு அருண ஜயசேகரவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாக்கல் செய்கிறது. சபாநாயகர் உத்தரவு பிறப்பித்ததும், நாங்கள் அதை பகிரங்கப்படுத்துவோம் – அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அரசியலை இவ்வளவு தாழ்ந்த நிலைக்கு கொண்டு வரக்கூடாது என்று நான் சொல்ல வேண்டும். எதிர்க்கட்சி இப்போதும் இத்தகைய குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம்,” என்றார்.

ஈஸ்டர் தாக்குதலின்போதும் அதன் பின்னரும் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் அருண ஜயசேகரவிற்கு எதிராக எந்த விசாரணைகளையும் நடத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“கடந்த 6 ஆண்டுகளாக அருண ஜயசேகர மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இது இரண்டு அரசாங்கங்களின் பதவிக்காலத்தில் நடந்தது. நாங்கள் ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை மீண்டும் பதவியில் அமர்த்தியிருக்கும்போது, பிள்ளையான் மற்றும் அவரது கூட்டாளி இனியபாரதி ஆகியோரைக் கைது செய்திருக்கும்போது, மேலும் அசட் மௌலானாவுடன் தொடர்பு ஏற்படுத்தியிருக்கும்போது, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாக்கல் செய்கிறது,” என்றார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு அருண ஜயசேகரவிற்கு எதிராக விசாரணையை நடத்தத் தவறிய ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு எதிராக இப்போது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ரத்நாயக்க கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )