
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தவும்; சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்து
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தி சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை புதிய அரசியல் யாப்பினூடாக ஆட்சியாளர்கள் கொண்டு வர வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறையும் அதிகார பகிர்வும் எனும் தலைப்பில் யாழில் இடம்பெற்ற கருத்தரங்கின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய ஆட்சியாளர்கள் தாங்கள் இனவாதிகளோ மதவாதிகளோ அல்ல எனவும் எல்லோரும் சமத்துவம் என்று பேசினாலும் கூட அந்த சமத்துவத்தை நோக்கிய பாதையில் உண்மையில் பயணிக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.
அவர்களும் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்குவதற்கு தயாராக இல்லாத நிலைமையே காணப்படுகிறது. காலத்தை இழுத்தடித்து ஏமாற்றுகின்ற கைங்கரியத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மாகாண சபைத் தேர்தல் நடக்கும் என்றும் புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும் என கூறினாலும் அதற்காக எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஆனால் புதிய அரசியல் யாப்பு வரும் என்றும் அந்த புதிய அரசியல் யாப்பில் அதிகபட்ச சுயாட்சி அதிகார பகிர்வு வரும் என்ற கற்பனையில் கூட பலர் இருக்கிறார்கள்.
உண்மையில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் ஆட்சியாளர்கள் எதுவும் பேசவில்லை. இவ்வாறான நிலைமையில் கற்பனையில் இருக்க போகிறோமா அல்லது இருப்பவற்றை வைத்து அடுத்து நோக்கி பயணிக்க போகிறோமா என்று பார்க்க வேண்டும்.
தமிழ் மக்கள் தமக்கு சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க வேண்டுமெனக் கோருகிறார்கள். அது வழங்கப்படும் வரையில் இருக்கிற அதிகாரங்களை பலப்படுத்திக் கொண்டு முதலில் பயணிக்க வேண்டும். இதனை சொல்வதால் எனக்கு கூட துரோகம் பட்டம் கட்டப்படும். அதற்கு மேலாக யாருக்கோ வேலை செய்வதாக கூட சொல்லலாம். ஆனால் உண்மையை சொல்வதால் நாம் எதற்கும் தயார்.
மாகாண சபை அதிகாரங்கள் வைத்துக் கொண்டு நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். அதிகார பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் இதற்கு கால அவகாசம் கேட்க தேவையில்லை. இழுத்தடிக்கவும் தேவையில்லை. இருக்கின்ற அதிகாரங்களில் அடிப்படையில் தேர்தலை நடாத்த வேண்டும். அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும்.
இவற்றை பின்தள்ளி விட்டு நாங்கள் முன்நோக்கி செல்ல முடியாது. இல்லாவிட்டால் அது ஆபத்தாக அமையும். இவ்வாறாக தொடர்ந்தும் அதிகாரங்களை வழங்காமல் ஆட்சியாளர்கள் ஏமாற்றுகிற போது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்பட கூடிய இனமாக மாற்றப்பட்டு விடக்கூடிய ஆபத்து உள்ளது.
இத்தகைய ஆபத்திலிருந்து விடுபட எம்மை நாமே வளர்த்து கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும். எனவே மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடாத்த வேண்டும். மேலும் புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் கோருகின்ற சமஸ்டி அடிப்படையிலான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்றார்.