பிள்ளையான் அணி வாக்குமூலம்; பொது மயான அகழ்வுப் பணிகள் நிறைவு

பிள்ளையான் அணி வாக்குமூலம்; பொது மயான அகழ்வுப் பணிகள் நிறைவு

பிள்ளையான் அணியின் முக்கிய உறுப்பினரான இனியபாரதியின் சகாவான அனோசியஸ் சுரேஸ்கண்ணா எனப்படும் யூத் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட பொது மயானத்தில் நடைபெற்ற அகழ்வுப் பணிகள் (31) மாலை நிறைவடைந்தன.

இன்று முற்பகல் முதல் அக்கரைப்பற்று மாவட்ட நீதிவான் நீதிபதி ஏ.சி. றிஸ்வான் மேற்பார்வையில், ஜே.சி.பி இயந்திரம் மூலம் பொது மயானத்தில் அடையாளம் காணப்பட்ட பல இடங்கள் தோண்டப்பட்டன.

இருப்பினும், எவ்வித ஆதாரங்களும் கிடைக்காததால், இந்தப் பணிகள் மாலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான அனோசியஸ் சுரேஸ்கண்ணா (யூத்), மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவர் தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில், தனது தாயைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பிள்ளையான் அணியில் இனியபாரதியின் முக்கிய சகாவாகச் செயல்பட்ட இவர், திருக்கோவில் பகுதியில் தனியார் தொலைத்தொடர்பு சிம் விற்பனை முகவராகப் பணியாற்றிய அருளானந்தன் சீலன் என்பவரைக் கடத்தி, படுகொலை செய்து, குறித்த பொது மயானத்தில் புதைத்ததாக அரச சாட்சியாக மாறி, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தார்.

எனினும், அகழ்வுப் பணிகளின் முடிவில் எவ்வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்பதால், இந்தச் செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன.

இதன்போது, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.எம். றியாஸ், பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பலர் பிரசன்னமாயிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )