
அரச திணைக்களங்கள் பல சேர்ந்து திருகோணமலை வெருகலில் 10 இடங்களில் காணி அபகரிக்க முயற்சி; மக்கள் பெரும் கொந்தளிப்பு
திருகோணமலையில் தமிழ் மக்கள் முழுமையாக வாழும் வெருகலில் உள்ள வட்டவான் பகுதியில் தொல்லியல் என்ற பெயரில் மக்களுடைய விவசாய காணிகளை அபகரிக்கும் தொல்லியல் துறையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று வியாழக்கிழமை (24) தொல்லியத் துறையினரால் தொல்லியலுக்கான இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கையின் பின்னரே அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை இவ்வாறு வெளியிட்டனர்.
தொல்லியல் திணைக்களமானது வெருகல் வட்டவான் பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கையை நேற்று (24) வனவள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்திருந்தன . இதன்போது அந்தப் பகுதியில் 10 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றை பாதுகாக்கும் நோக்கில் அந்த மலை உச்சியில் இருந்து அதனைச் சுற்றியுள்ள 50 மீற்றர் பகுதி தொல்லியலுக்குரியதாக அடையாளப்படுத்தப்படும் எனவும், அந்த பகுதிக்குள் ஏதாவது சிறு குன்றுகள் அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால் அதில் இருந்தும் 50 மீற்றர் சுற்றிவர தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்படும் எனவும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு குறித்த பகுதிகள் தொல்லியலுக்குரியதாக அடையாளப்படுத்தப்படுமாக இருந்தால் அப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 200 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொல்லியல் திணைக்களத்தால் கையகப்படுத்தப்படலாம் எனவும் அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் எமது விசாய நிலங்களை இழப்பதோடு எமது வாழ்வாதாரத்தையும் நாம் இழக்க வேண்டி வரும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தொல்லியல் என்ற பெயரில் எங்களுடைய விவசாய நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கும், பௌத்தமயமாக்கும் நடவடிக்கைக்கும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.இத்தனை வருடகாலமான இந்த நிலத்தில்தான் நாங்கள் விவசாயம் மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் எந்த தொல்லியல் சின்னங்களையும் அழிக்கவில்லை. எனவே தொடர்ந்து எமது நிலங்களை பாதுகாக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
குறித்த பகுதியில் 290 ஏக்கரில் பதிவு இடாப்பு வைக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனவே இவற்றை கருத்தில் கொள்ளாது எங்களுடைய வாழ்வாதாரமாக இருக்கின்ற விவசாய காணிகளை ஆக்கிரமிப்பதற்கு தொல்லியல் திணைக்களம் முயற்சிக்குமாக இருந்தால் பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கையை முன்னெடுக்க மக்கள் தயாராகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 17.07.2025 அன்று இடம்பெற்ற வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு ஏற்ப நேற்று (24) குறித்த பகுதியில் தொல்லியலுக்குரிய சின்னங்கள் அடையாளப்படுத்தும் நடவடிக்கை அனைத்து திணைக்களங்களினதும் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும், இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 14.08.2025 அன்று இடம்பெறும் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்படும் எனவும், குறித்த மலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதிகாலம் தொட்டு மக்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும் இவற்றை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைக்கு மக்கள் எதிர்பை வெளியிட்டு வருவதாகவும் வெருகல் பிரதேச சபை தவிசாளர் கருணாநிதி தெரிவித்தார்.