நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது – சரத் வீரசேகர

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது – சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று முற்றுமுழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது, இந்த விசாரணைகளிலிருந்து மக்கள் திசை திருப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்படுவது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமரியாதைக்கு உட்படுத்துவதாகும். நாட்டில் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நிலாந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனுடன் நேரடியாகத் தொடர்புடைய இப்ராஹிம் என்ற நபர் இன்னும பொது வெளியில் சுதந்திரமாகவே நடமாடிக் கொண்டிருக்கின்றார். அவர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்த நபராவார். கட்டுவாப்பி;ட்டிய தேவாலயத்தில் தாக்குதல்களை மேற்கொண்ட பிரதான சந்தேகநபரின் மனைவி எனக் கூறப்படும் சஹரா ஜெஸ்மின் தொடர்பிலும் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறு பேசப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தியுள்ளனர். இந்த விசாரணைகளிலிருந்து மக்கள் திசை திருப்பப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்படுவது தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களை அவமரியாதைக்கு உட்படுத்துவதாகும்.

இன்று இந்த நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் ஏதேனுமொரு பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. இவை பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை. எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாத போதிலும் மக்கள் அச்சத்துடனேயே நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.

புலனாய்வுப் பிரிவு இதனை விட உத்வேகத்துடன் செயற்பட வேண்டும். பொலிஸாருக்கு வேண்டிய சலுகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பு துறை பலப்படுத்தப்பட்டால் மாத்திரமே பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியம். இவ்வாறு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தான் இன்று பொது மக்கள் பாதுகாப்பு பூச்சிய நிலைமைக்கு வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )