
ஜனாதிபதியாக முன் அநுரவழங்கிய 22 இல் 1வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றம்; அதுவும் ரணில் நிறைவேற்ற இருந்ததே என்கிறார் சாகர
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக முன்னர் வழங்கிய வாக்குறுதிகளில் ஒரே ஒரு வாக்குறுதியை மாத்திரமே இதுவரையில் நிறைவேற்றியுள்ளார் என்றும், அந்த வாக்குறுதி ரணில் விக்கிரமசிங்கவினால் நிறைவேற்றுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த விடயமே என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘வெரிடே ரிசேச்’ ஆய்வு அமைப்பால் செய்யப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக முன்னர் வழங்கிய 22 வாக்குறுதிகளில் இதுவரையில் ஒரு வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி தொடர்பான வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியானது ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில் அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததையே அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்துள்ளார். இதனை தவிர வேறு எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றப்படவில்லை.