
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு ஆதரவான ”சதி ”தோற்றது
தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிக்க வேண்டாமெனக் கோரி தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் தொடர்ச்சியாக சிங்களவர் முஸ்லிம், தமிழரென மூவரை ஈடுபடுத்தி சில தரப்பினரால் முன்னெடுக்கவிருந்த உண்ணாவிரதப் போராட்ட சதி தோற்றுப் போனது
சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரியும் ஆக்கிரமிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடந்த இரண்டு வருட காலமாக மாதம் தோறும் பூரணை தினத்திலும் அதற்கு முன்னைய தினமும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுத்து வருகின்றது.
இந் நிலையில் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகப் போராட்டத்தைக் குழப்பும் வகையில் நேற்று முன்தினம் புதன்கிழமை முதல் மூன்று தினங்களுக்கு சிங்களவர், முஸ்லிம், தமிழர் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த தலா ஒருவர் இணைந்து, தையிட்டி திஸ்ஸ விகாரையை இடிக்க வேண்டாமெனக் கோரி தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தகவல் பரவியிருந்தது.
இதனை அறிந்து ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் புதன்கிழமை காலை முதல் மேற்படி விகாரைக்கு அருகில் காத்திருந்த நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் முதியவரான முஸ்லிம் இனத்தவரொருவர் அந்த இடத்திற்கு வருகை தந்தார். அந்த முதியவர், தான் மட்டக்களப்பிலிருந்து இங்கு வந்ததாகவும், சிலரது அழைப்பின் பேரிலேயே இங்கு வந்ததாகவும் தெரிவித்து அவ்விடத்தில் நின்றவர்களுடன் கலந்துரையாடினார்.
இதன்போது தமது போராட்ட நியாயப்பாடுகளை அந்த முதியவருக்கு எடுத்துக் கூறிய ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் தமது போராட்டத்தைக் குழப்பும் சதி நடவடிக்கைக்கு எதிராகவும் எதிர்ப்புக் குரல்கள் எழுப்பினர்.அந்த முதியவரும் ஒதுங்கிக் கொண்டார்.
ஆக்கிரமிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து அங்கு நின்ற பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அந்த முதியவரை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார்.