
நீதி கேட்பதற்கான ஆதாரமாக இன்று செம்மணிப் புதைகுழி!; சர்வதேச தூதரகங்கள் கவனம் செலுத்த வேண்டும்
இலங்கை இராணுவத்தின் அட்டுழியத்தால் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்டதன் முக்கிய அடையாளமாக செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ளது. இதற்கு மேலான எந்தவொரு ஆதாரமும், விசாரணையும் தேவையில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் மக்கள் செயல் எனும் தன்னார்வ இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்குப் போராட்டம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரியதொரு இராணுவ முகாம் முள்ளிச் சந்தியிலிருந்து செம்மணி வரை வியாபித்திருந்தது. இது பலருக்கும் தெரிந்த விடயம். மாணவி கிரிசாந்தியின் கொலையுடன் தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தாலும் கூட இங்கு பல கொலைகள் நடந்துள்ளன. தற்போது செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து, அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடாத, இராணுவம் நியாயப்படுத்த முடியாத உடல்கள் கண்டெடுக்கப்படுகின்றன. இதன்மூலம் அந்த உடல்கள் போராளிகளுடையது அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கனடா, பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஏற்கனவே தெளிவான நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகை தந்துள்ள நிலையில் சிறீதரன், சாணக்கியன் ஆகியோர் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக அவரைச் சந்தித்துக் கலந்துரையாடுவர்.
இலங்கையில் உள்ள சர்வதேச தூதரகங்கள் தத்தமது நாடுகளுக்கு நீதி கேட்பதற்கான ஆதாரமாகச் செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட விடயங்களைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.