
பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர் வசம்
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களினால் கொழும்பு -7இல் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகமும் கைப்பற்றப்பட்டது.
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியிலும் பெருந்திரளான போராட்டக்காரர்கள் பாதுகாப்பு தரப்பினரின் தடுப்புகளையும் கடந்து பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை ஆகியவற்றை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஜனாதிபதியுடன் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த போராட்டக்காரர்கள், ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலகாது ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்களையடுத்தே அவர்கள் பிரதமர் அலுவலகத்தை சுற்றிவளைத்து கைப்பற்றினர்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதாக வெளியான தகவல்களையடுத்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் உள்ளிட்ட போராட்டக் களத்தில் இருந்த பலரும் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அங்கு பெருமாளவான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதுடன், அவர்கள் அங்கு போராட்டக்காரர்கள் உள்ளே செல்ல முடியாதவாறு இரும்பு வேலிகளுடனான தடைகளை போட்டிருந்தனர்.
இவ்வேளையில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் முறுகல் நிலைமை ஏற்பட்ட நிலையில், அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகங்களை மேற்கொண்டனர். எனினும் அங்கு தொடர்ந்தும் தங்கியிருந்த போராட்டக்கார்கள் உள்ளே செல்ல கடும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இதேவேளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர், அந்தப் பிரதேசங்களில் உள்ள தனியார் கட்டிடங்களுக்கு சென்று அங்கே அரசியல்வாதிகள் யாரும் இருக்கின்றனரா என்று தேடினர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேல் மகாணத்தில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதுடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தையும் அமுல்படுத்தினார். அதேவேளை பதில் ஜனாதிபதியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகரும் அறிவித்தார்.
இந்த அறிவித்தல்களை தொடர்ந்து ஆத்திரமடைந்த காலிமுகத்திடலில் இருந்த பலர் பிரதமர் அலுவலகம் நோக்கி விரைந்தனர். இதன்போது பாதுகாப்பு தரப்பினரின் தடைகளையும் உடைத்துக்கொண்டு பிரதமர் அலுவலகத்திற்குள் சென்று அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

