வீதி புனரமைப்பை தடுத்து நிறுத்திய உப நகர பிதா

வீதி புனரமைப்பை தடுத்து நிறுத்திய உப நகர பிதா

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மீசாலை அல்லாரை வீதி புனரமைக்கப்பட்டு வருகின்றது. இவ் வீதியின் புனரமைப்பின் தரம் தொடர்பிலும் புனரமைப்பின் பொது பின்பற்றப்படுகின்ற நடைமுறை தொடர்பிலும் பொதுமக்களால் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி குறித்த வீதிக்குச் சென்ற சாவகச்சேரி உப நகர பிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி புனரமைப்புப் பணிகளை பார்வையிட்டதோடு பொதுமக்களோடும் கலந்துரையாடினர்.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தரோடு கலந்துரையாடி அப்பகுதி மக்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு ஒன்றினை உருவாக்கிய பின்னர் வீதி புனரமைப்பு பணிகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதுவரை புனரமைப்பு வேலைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதனை மீறி நேற்று (15) புனரமைப்பு பணிகள் தொடரப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட வீதிக்கு சென்ற உப நகர பிதா ஞா.கிஷோர் மற்றும் உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளரை தொடர்பு கொண்டு வீதிப் புனரமைப்பின் குறைபாடுகள் தொடர்பில் சுட்டிக்காட்டி மக்களை தெளிவு படுத்தி கண்காணிப்பு குழு ஒன்றினை அமைக்குமாறு கேட்டதோடு அதுவரை புனரமைப்பை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து புனரமைப்பு பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதோடு இன்று (16) காலை 10.00 மணிக்கு அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றவுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )