போதுமான நிதியை அரசாங்கம் ஒதுக்காவிடின் செம்மணிப் புதைகுழியை அகழ வெளிநாட்டு நிதியை பெறுவோம்

போதுமான நிதியை அரசாங்கம் ஒதுக்காவிடின் செம்மணிப் புதைகுழியை அகழ வெளிநாட்டு நிதியை பெறுவோம்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி உள்ளிட்ட அது தொடர்பான நடவடிக்கைளுக்காக போதுமான நிதியை ஒதுக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு போதுமான நிதியை ஒதுக்க முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு தங்களால் உதவ முடியுமென்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போதே நீதி அமைச்சரிடம் இந்த கோரிக்கையை விடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் செம்மணியில் பாரிய மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கே எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சர்வதேச ரீதியிலான பாரிய மனித புதைகுழிகள் என்று கூறும் தன்மையை கொண்டுள்ளது. இங்கே எவ்வித பாதுகாப்பும் போடப்படவில்லை. மக்கள் அங்கு சென்று எதனையும் செய்யலாம் என்பதை போன்று உள்ளது. அந்த புதைகுழி தொடர்பான நடவடிக்கைகளுக்ககாக போதுமான நிதி இல்லை. அங்கு அகழ்வுகளை நடத்துவதற்கும் சட்ட மருத்துவ அதிகாரி விடயங்களை செயற்படுத்துவதற்கும் நிதி போதுமாக இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள நிதி 20 நாட்களுக்கும் போதுமானது அல்ல. போதிய நிதி இல்லாமல் அந்த நடவடிக்கைகளை நிறுத்தப் போகின்றனர். இதனால் அந்த புதைகுழியை பாரிய மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும். அதற்காக நிதியை ஒதுக்க வேண்டும். உங்களுக்கு தேவையென்றால் வெளிநாடுகளில் இருந்து நாங்கள் நிதியை பெற்றுத்தரவும் உதவலாம். 1996 காலப்பகுதியில் அங்கே நடந்த கிருஷாந்தி கொலை வழிக்கின் போது 600 பேர் அங்கிருந்து காணாமல் போனமை தெரியவந்தது. இதனால் உண்மைகளை கண்டறிய வேண்டும். இதற்காக நிதியை ஒதுக்குமாறு நாங்கள் கோருகின்றோம். இதனை பாதுகாப்பதற்காகவும், சாட்சியங்களை பாதுகாப்பதற்காகவும் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )