
3007 ஆவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 3007 வது நாளை அடைந்துள்ள நிலையில் (31) காலை மாங்குளம் நகரில் உறவுகள் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள் மாதந்தோறும் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையிலே முல்லைத்தீவு மாவட்டத்திலே மேற்கொள்ளப்படுகின்ற இந்த போராட்டம் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்வதற்காக தீர்மானித்திருந்தனர்.
அந்தவகையில் துணுக்காய், மாந்தை கிழக்கு, மாங்குளம் பகுதிகளை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் மாங்குளம் நகரில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
தமது உறவுகளுக்கான நீதி இலங்கையில் கிடைக்காது எனவும் சர்வதேசத்தின் ஊடாகவே தமக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கோரி இந்த மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலைமையில், இன்று காலை மாங்குளம் நகரில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மதத் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.